பொதுமக்களின் துன்பங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்பாக அவற்றை அரசாங்கம் எப்படி, எவ்வாறு தடுக்க வேண்டும் ? அரசுக்கு சஜித்தின் எச்சரிக்கையுடனான அறிவுத்தல்கள்

பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவொன்றில், தற்போதைய உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் குடிமக்கள் மீதான சுமையைக் குறைக்கும் நோக்கில், பங்களாதேஷும் மிகவும் யதார்த்தமான IMF உடன்படிக்கையொன்றை நாடிவருகிறது என்பதை பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல், இலங்கையும் தனது பொருளாதாரக் கொள்கை முடிவுகளின் மையப்புள்ளியாக பொதுமக்களின் நலனை முன்வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பொருளாதாரக் கொள்கை என்பது பற்றாக்குறைகள் மீண்டும் ஏற்பட்டு, விலைகள் மேலும் உயர்ந்து, குடும்பங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கும் ஒரு காத்திருப்பு விளையாட்டாக மாற முடியாது. துன்பங்கள் தாங்க முடியாததாக மாறுவதற்கு முன்பாக மக்களைப் பாதுகாப்பதே தலைமையின் பொறுப்பாகும்,” என்று அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து எச்சரித்துள்ள பிரேமதாச, பற்றாக்குறைகள் தீவிரமடைந்து, விலைகள் மேலும் அதிகரித்து, குடும்பங்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலையை உருவாக்கக் கூடாது என எச்சரித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் துன்பங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்பாக அவற்றைத் தடுக்கும் பொறுப்பு தலைமைத்துவத்திற்கு உண்டு எனத் தெரிவித்துள்ள அவர், மேலும் ஆழமான பொருளாதார சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கும் போதே அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.



