மகாநாயக்க தேரர்கள் எடுக்கும் முடிவுகளையும், தீர்மானங்களையும் நாம் ஏற்றுக்கொண்டு இணங்கி, அதற்கு தலைவணங்கிச் செயல்பட வேண்டும்… அது சரியா தவறா என்பது நமக்குரிய பிரச்சினை அல்ல ; மகிந்த

கொழும்பு, கொஹுவல வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “தாது மந்திர்” திறப்பு விழா நேற்றைய தினம் மாலை பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
அமரபுர தர்ம ரக்ஷித மகா நிகாயவின் அநுநாயக்கர், சாஸ்திரபதி வதகெதர விமல புத்தி அநுநாயக்க தேரரின் திருக்கரங்களால் இந்த புதிய தாது மந்திர் திறந்து வைக்கப்பட்டது.
இந்த உற்சவத்தில்
மகா சங்கத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டதுடன், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான பௌத்த மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்,
இவ்வருடம் மே மாதத்தில் இரண்டு வெசாக் போயா தினங்கள் வருவது குறித்து எழுந்துள்ள சர்ச்சை மற்றும் கலந்துரையாடல்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், மகாநாயக்க தேரர்கள் கூறும் கருத்துக்களையும் எடுக்கும் முடிவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அது சரியா தவறா என்பது நமக்குரிய பிரச்சினை அல்ல என்பதால் அதனை நம்மால் கேள்விக்குட்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், மகாநாயக்க தேரர்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தால் நாம் அதற்கு இணங்கி, தலைவணங்கிச் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், இம்முறை வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகள் குறித்து வினவியபோது, தாம் எப்போதும் போல சாதாரணமான முறையிலேயே இம்முறையும் வெசாக் தினத்தைக் கொண்டாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
