அஷ் ஷேக் அர்கம் நூராமித் அவர்களின் சவூதி விசாரணை – உண்மைப் பின்னணியும் எமது நிலைப்பாடும்
இம்முறை ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியா சென்றுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ் ஷேக் அர்கம் நூராமித் அவர்கள், சவூதி அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவாறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. தேவையற்ற வதந்திகளைத் தவிர்த்து, உண்மை நிலவரத்தை சமூகத்திற்குத் தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.
இவ்விடயம் குறித்து அஷ் ஷேக் அர்கம் நூராமித் அவர்களுடன் நான் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையில், நம்பகமான விபரங்களை இங்கே பதிவு செய்கின்றேன்.
🔴 விசாரணைக்கான பின்னணி என்ன?
மக்கா அல்-முஹர்ரமாவின் ‘சிலோன் ஹவுஸ் வக்ஃப்’ ஷரியா மேற்பார்வையாளர் முஹம்மது பின் ரியால் (சாதிக் ஹாஜியார்) என்பவரால் சவூதி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒரு தனிப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
🔴 சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்.
- கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அஹ்லுஸ் சுன்னத் அறிஞர்களின் நூல்கள் மற்றும் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் சமூகத்திற்கு அச்சுறுத்தல் எனப் போலி அறிக்கை சமர்ப்பித்து, அவற்றை கொழும்புத் துறைமுகத்தில் தடுத்து வைக்கக் காரணமானார் என்பது.
- ஹஜ் யாத்திரிகர்களிடம் தவறான கொள்கைகளைப் பிரசாரம் செய்கின்றார் என்பது.
🔴 உண்மை என்ன?
கடந்த 2022 ஆம் ஆண்டு, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்களில் தீவிரவாதக் கருத்துக்கள் காணப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து பரிந்துரைக்க, பாதுகாப்பு அமைச்சினால் ஓர் உத்தியோகபூர்வக் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் அஷ் ஷேக் அர்கம் நூராமித் அவர்களும் பாதுகாப்பு அமைச்சினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தார். இக்குழுவின் பரிந்துரையின் கீழ், பல இலட்சக்கணக்கான நூல்கள் எவ்விதத் தடையுமின்றி இன்றுவரை பொதுமக்களைச் சென்றடைந்துள்ளன என்பதுவே உண்மை.
இங்கே நான் ஒரு முக்கிய விடயத்தை பகிரங்கமாகப் பதிவு செய்ய விரும்புகின்றேன். புனித அல்குர்ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, தடை விதிக்கப்பட்ட நடவடிக்கையை நான் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வந்த ஒருவனாவேன்.
எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும் பரப்புவதற்கும் உள்ள அடிப்படை மற்றும் மனித உரிமைகளை இந்தத் தடை முற்றிலும் மீறுகின்றது என்பதை சுட்டிக்காட்டி, கடந்த 2022 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு (MOD) எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்த நபர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். கொள்கை ரீதியாக இந்தத் தடையை நாம் வன்மையாக எதிர்த்தாலும், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வக் குழுவில் அங்கம் வகித்த அர்கம் மௌலவி மீது பழிசுமத்துவது முற்றிலும் அநீதியானது.
தற்போது அஷ் ஷேக் அர்கம் நூராமித் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரின் கடவுச்சீட்டு (Passport) இன்னமும் சவூதி அதிகாரிகளிடமே உள்ளது. அவர் சுதந்திரமாக நடமாடினாலும், கடவுச்சீட்டு கையில் ஒப்படைக்கப்படாத வரை அவர் ஒரு குற்றவாளியைப் போன்ற தோற்றப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார். இது அவர் இலங்கைக்குத் திரும்புவதிலும் பாரிய சிக்கலைத் தோற்றுவிக்கும்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு நெறிமுறைகளின்படி (Security Protocols), பாதுகாப்பு அமைச்சின் கட்டளைகளையும் பொறுப்புகளையும் ஏற்று, உத்தியோகபூர்வமாகப் பணியாற்றிய ஒரு அரச குழுவின் பிரதிநிதிக்கு மாற்று நாடொன்றில் இத்தகைய அச்சுறுத்தல் ஏற்படும் போது, பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defense) இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும்.
அவர் மீதான அனைத்துப் போலிக்குற்றச்சாட்டுகளையும் நீக்கி, அவரின் முழுமையான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய சட்டரீதியான மற்றும் தார்மீகப் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு.
பிரதமர் வரை இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டும், அங்குள்ள ஹஜ் கமிட்டி மற்றும் அதிகாரிகள் இதுவரை காத்திரமான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளாமல் ஒரு பொடுபோக்கான அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பது கவலையளிக்கிறது. சவூதிக்கான இலங்கைத் தூதுவர் இதற்குப் பதில் கூறியே ஆக வேண்டும்.
சாதிக் ஹாஜியார் அவர்கள் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கையில், அர்கம் மௌலவிக்கு எவ்விதச் சங்கடங்களும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தாலும், கடவுச்சீட்டு இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். எனினும், எமது சில பிரத்தியேக இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நகர்வுகள் ஊடாக, அவரின் கடவுச்சீட்டை மீளப் பெற்றுக்கொள்வதற்கான தீவிர முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை முஸ்லிம்களின் நலன்களில் எப்போதும் பக்கபலமாக இருக்கும் சவூதி அரசாங்கம், எமது நாட்டின் உள்வட்டக் கொள்கை ரீதியான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட இந்தப் போலிப் புகார் குறித்து பூரண தெளிவோடு செயலாற்ற வேண்டும் என மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பாதுகாப்புத் துறையின் வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பணியாற்றிய ஒரு பிரஜையின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது, அரசாங்கம் மௌனம் காக்கக் கூடாது என்பதை நாம் உரக்கச் சொல்லியாக வேண்டும். அர்கம் மௌலவி அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப எமது கூட்டுப் பிரயத்தனங்கள் தொடரும்.
இன்ஷா அல்லாஹ், விரைவில் நல்ல செய்தி கிட்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
வஸீர் முக்தார்.



