கண்டியில் இருந்து கடுகண்ணாவைக்கு சென்ற பஸ் பயணிளுக்கு இலவச டிக்கட் மற்றும் சுவையான மதிய உணவுப் பார்சல்களை தன்சல் வழங்கிய பேருந்து உரிமையாளர்

மத்திய மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டு, கண்டி — கடுகண்ணாவை ஆகிய நகரங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்றின் உரிமையாளரும் அதன் ஊழியர்களும் இணைந்து, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விசேட ‘பஸ் தன்சலை’ (Bus Dansala) ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முற்றிலும் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி, பேருந்தில் பயணித்த அனைத்துப் பயணிகளுக்கும் சுவையான மதிய உணவுப் பார்சல்களும் குடிநீர் போத்தல்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
“பணத்திற்காகப் போட்டிபோடும் இன்றைய காலகட்டத்தில், பயணிகளிடம் காசு வாங்காமல் இலவசமாக ஏற்றிச் சென்றதுடன், மதிய உணவும் தந்து உபசரித்தது எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது,” என அதில் பயணித்த பயணிகள் பலரும் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பேருந்து ஊழியர்களின் இந்த முன்மாதிரியான செயல், ஏனைய போக்குவரத்து ஊழியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இலங்கையில் வெசாக் மற்றும் பொசோன் பௌர்ணமி தினங்களில் பௌத்த மக்கள் தங்களின் தாராள குணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல வகையான ‘தன்சல்களை’ (இலவச உணவு/பான உபசரிப்பு நிலையங்கள்) நடத்துவது வழமையாகும்

