“இனி எரிபொருள் மானியம் வழங்க முடியாது.. மேலும் நஷ்டத்தை தாங்க முடியாது.. எரிபொருள் நுகர்வை குறைக்கவும்.. – CPC தலைவர்”
எரிபொருள் விலை திருத்தப்பட்ட போதிலும், ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் அரசாங்கத்திற்கும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் இன்னும் பெரும் நஷ்டம் ஏற்படுவதனால், பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை அதிகபட்சமாக கட்டுப்படுத்த வேண்டும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
டீசல் லீற்றர் ஒன்றின் செலவு 536 ரூபாயாக இருந்தபோதிலும், அது 407 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதாக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக அரசாங்கம் 100 ரூபாய் தொகையை ஏற்றுக்கொள்வதாகவும், அதன் பின்னரும் அரசாங்கத்திற்கு 29 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் செலவு 494 ரூபாயாக இருந்தபோதிலும், அது 434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லீற்றரிலிருந்து 60 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
எரிபொருள் மானியத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 57 பில்லியன் ரூபாய் தொகை இந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக தலைவர் கூறுகிறார். இதன் காரணமாக, மேலும் இந்த நஷ்டத்தைத் தாங்குவது கடினமாகியுள்ளதுடன், இதற்கு முன்னர் மாதமொன்றிற்கு 100-120 மில்லியன் டொலர்களாக இருந்த எரிபொருள் செலவு, கடந்த மாதத்தில் 522 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளமையானது பொருளாதாரத்திற்கும் டொலர் கையிருப்புக்கும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் செலவு அதிகரிப்பானது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால், பொதுமக்கள் பொறுப்புடன் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தலைவர் வலியுறுத்தினார்.
அவ்வாறு இல்லையெனில் டொலர் நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என அவர் எச்சரித்தார்.
எரிபொருள் கட்டுப்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு (QR Code) முறையை முறையாக நடைமுறைப்படுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் தரகுப் பணம் (Commission) அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், QR முறையைப் பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை இந்த வாரம் முதல் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.



