News

“நிறுவனங்கள் நஷ்டத்திலேயே எரிபொருளை விற்கின்றன.. அப்படி செய்ய முடியாது.. நிறுவனங்கள் எரிபொருளைக் கொண்டு வராவிட்டால் தட்டுப்பாடு ஏற்படும்..”

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் எண்ணெய் கூட்டுத்தாபனமும் தற்போது பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள விலைகளின் கீழ் இந்த நிறுவனங்களால் தொடர்ந்து நஷ்டத்தை சகித்துக் கொள்ள முடியாது எனவும், ஏதேனும் ஒரு காரணத்தினால் அவர்கள் எரிபொருள் இறக்குமதியிலிருந்து விலகினால் நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விலை அதிகரித்த போது, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரியினால் 57,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி, ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாவும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாவும் திறைசேரியினால் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதுடன், அந்த ஒட்டுமொத்த சுமையையும் திறைசேரியினால் இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாது என அமைச்சர் கூறுகிறார். “திறைசேரி இந்த நஷ்டத்தைத் தாங்கினால், இறுதியில் அந்தப் பணத்தை மீண்டும் மக்களிடமிருந்தே வசூலிக்க நேரிடும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

விலை திருத்தம் செய்யப்படாவிட்டால், நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியை நிறுத்தக்கூடும் என்றும், அத்தகைய சூழ்நிலையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் மேலும் எச்சரித்தார்.

எனவே, திறைசேரி, எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இந்த சுமையின் ஒரு பகுதியை பகிர்ந்துகொண்டு, உலக சந்தை விலைக்கு ஏற்ப விலை மாற்றங்களை மேற்கொள்வதே இதற்கான தீர்வாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button