News

“எரிபொருள் விலை மட்டும்தானே பெருமளவில் அதிகரித்துள்ளது.. மற்றப் பொருட்களின் விலைகள் அந்தளவுக்கு அதிகரிக்கவில்லையே.. – NPP நாடாளுமன்ற உறுப்பினர்”

“உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய உயர்வு எதுவும் ஏற்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய பொருளாதார நிலைமையை அரசாங்கம் மிகச் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்த தரவுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர், பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட போதிலும், ஏப்ரல் மாதமாகும் போது அந்தச் செலவு 522 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு மத்தியில், ஒரு லீற்றர் எரிபொருளின் உண்மையான விலை சுமார் 740 ரூபாவாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அரசாங்கம் தற்போது அதனை 424 ரூபா என்ற எல்லைக்குள் பேணி வருகின்றது.

இதற்காக திறைசேரி சுமார் 20,000 கோடி ரூபாவை செலவிட்டு எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்வது, மக்கள் மீது முழுமையான சுமையை சுமத்தாமல் இருப்பதற்காகவே என்று அவர் வலியுறுத்தினார்.

எரிபொருள் விலையைத் தவிர ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதால், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான கடுமையான தேவை தற்போது இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தெரிவித்தார்.

இருப்பினும், இது தொடர்பாக பேருந்து சங்கங்களுடன் கலந்துரையாடி, மக்களுக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்தகால அரசாங்கங்களைப் போலல்லாமல், உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலைகளைக் குறைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பத்மகுமார தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் கூட இலங்கையின் பொருளாதாரம் எந்தவொரு சர்வதேச சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய மட்டத்திற்கு வந்துள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுக்குரிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் நிறுத்தாமல் முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.”

Recent Articles

Back to top button