நமது நாட்டில் புத்த சாசனத்திற்கு விசேட இடம் வழங்கப்பட்டுள்ளது… புத்த சாசனத்திற்கு முன்னுரிமை வழங்கி, அதனை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் நம்மனைவரினதும் கடமையாகும் ; சஜித்

நமது நாடு எல்லா வகையிலும் பாரதூரமான ஆபத்திற்கும் அவதானத்திற்கும் முகம் கொடுத்துள்ளது. பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மக்களின் வாழ்வாதாரம் பல்வேறு காரணங்களால் சீர்குலைந்து, வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. பொருட்களின் விலையேற்றம் தொடர்ந்து கூடி வருவதால் நாளாந்தம் மூன்று வேளை உணவுகளைக் கூட உண்ண முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டைப் பற்றியும், நாட்டின் 220 இலட்சம் குடிமக்களைப் பற்றியும் சிந்தித்து, நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். இந்த சிந்தனையோடு, இந்த பார்வையோடு 220 இலட்சம் மக்களும் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2026 ஹம்பாந்தோட்டை வெசாக் மகா பெரஹராவை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் உருவாகி காணப்படும் இந்த ஆபத்தான நிலைமைக்கு மத்தியில் பல சக்திகள் நமது நாட்டை தமது பல்வேறு நடவடிக்கைகளுக்கு இரையாக மாற்றுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பவாத தரப்பினர் இந்த நெருக்கடியை பயன்படுத்தி நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
ஆகையினால், இத்தகைய நிகழ்வுகளுக்கு இடமளிக்கக் கூடாது. ஒரு நாடாக 220 இலட்சம் மக்களினதும் ஒன்றிணைவால், ஒற்றுமையால், ஐக்கியத்தால், சமாதானத்தால், சகோதரத்துவத்தால் பல்வேறு சக்திகள் நமது நாட்டின் மீது விடுக்கும் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் தோற்கடிப்பதற்கு முடியும்.
இந்த தருணத்தில் நமது நாட்டின் மீது அழுத்தங்களைச் செலுத்தி வளங்களை கைப்பற்ற சிலர் திட்டமிட்டாலும், நமது நாடு ஒரு ஜனநாயக நாடாக பல்வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகள் நம்மத்தியில் காணப்பட்டாலும், நாட்டைக் காக்க, ஒன்றாய் கை கோர்க்கத் தயாரான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை பௌத்த இளைஞர் சங்கம், ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம், ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகம், ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சங்கம் மற்றும் ஹம்பாந்தோட்டை வர்த்தக சமூகம் என்பன இணைந்து இந்ந பெரஹராவை ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு புனித தந்தமடங்கிய பேழையை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புனித தந்தத்தை சுமந்துவரும் யானையின் மீது ஏற்றி வைத்தார்.
நாட்டு மக்களைப் போலவே நாடும் இன்றும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு சவாலாலும் மக்களே அதிக பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
நமது நாட்டில் புத்த சாசனத்திற்கு விசேட இடம் வழங்கப்பட்டுள்ளது. புத்த சாசனத்திற்கு முன்னுரிமை வழங்கி, அதனை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் நம்மனைவரினதும் கடமையாகும். அதேவளை ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய உரிய ஸ்தானங்களும் பாதுகாப்புகளும் நமது உச்ச சட்டமான அரசியல் யாப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எல்லா சமூகத்தினரும், அவர்கள் எந்த இனம், மதம், கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களாக காணப்பட்டாலும், இந்த பெரஹரா அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தையே ஏற்படுத்துகின்றன. இந்த நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை நமது நாட்டின் ஐக்கியம், இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரத்தை பாதுகாத்துத் தருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்



