இந்த கேஸ் சிலிண்டர் திருடன் யார் என்று தெரியுமா? தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கவும்

செ.தி.பெருமாள்
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல கிராமப் பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாளம் காணப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிசிடிவி (CCTV) காணொளிக் காட்சிகளில், அடையாளம் தெரியாத ஒருவர் வீடொன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்லும் காட்சி அதிர்ச்சியூட்டும் வகையில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காணொளியில் பதிவாகியுள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அல்லது அவரை அடையாளம் காண முடிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பொதுமக்களின் பேராதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட சந்தேகநபரை அடையாளம் காணும் அனைவரும், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனே தகவல் வழங்குமாறு வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மிகுந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.


