News

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் திருப்தியளிக்கின்றன

⚖️
*உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் திருப்தியளிக்கின்றன!*

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று கிறித்தவ தேவாலயங்களிலும் சுற்றுலா ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பிலான முறையான அரசியல் தலையீடுகளற்ற விசாரணைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு சுதந்திரமான நீதித்துறைக்கு வழிவிட்டிருக்கின்றமை வரவேற்கத் தக்க விடயமாகும்.

பயங்கரவாத தாக்குதல்களில் பலியான 278 அப்பாவி உயிர்கள், இன்றும் அங்கவீனர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் 500 உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இலங்கை மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் ஏழு வருடங்களாக காத்திருக்கின்றனர்.

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீதும் அவர்களது சமய கலாசார நம்பிக்கைகள் மீதும் இருப்பு மற்றும் பாதுகாப்பின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவும் கருதுவதால் தமக்கும் மேற்படி சுயாதீனமான விசாரணைகள் நீதியைப் பெற்றுத் தரும் என ஆறுதல் அடைந்துள்ளனர்.

போருக்கு பின்னரான இலங்கையில் மூலோபாய கேந்திர முக்கியத்துவமிக்க இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலன்களை மேம்படுத்திக் கொள்வதில் கரிசனையுள்ள  சர்வதேச பிராந்திய சக்திகளின் புவியரசியல் பின்புலத்தில் இலங்கை பெருந்தேசிய வாத இன மத வெறி சக்திகளின் இலக்காக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இருந்தமை பகிரங்க இரகசியமாகும்.

தம்புள்ளை, அழுத்கமை, காலி, அம்பாற, திகன என்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக இடையறாது கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனங்கள் வன்முறைகள், இருபத்தி நான்கு மணிநேரமும் ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட காழ்ப்புணர்வுப் பரப்புறைகள் என சகலதிற்கும் முற்றுப் புள்ளியாக 2015 ஆம் ஆண்டு மலர்ந்த நல்லாட்சியை நாம் நம்பி இருந்தோம், களத்தில் இறங்கியும் உழைத்தோம்.

என்றாலும், நீறுபூத்த நெருப்பாய் ஆழத்தில் உறங்கிக் கிடந்த பெருந்தேசிய வாத இனமத வெறி கூலிப்படைகள் அன்றைய ஜனாதிபதி பிரதமர் இருவருக்குமிடையில் ஏற்பட்ட அதிகார இழுபறியில் தலையிட்டு 2018 அக்டோபர் முதல் 52 நாட்கள் ஆட்சிபீடம் ஏறிய போது ஒட்டுமொத்த தேச மக்களின் கனவுகளோடு சிறுபான்மை முஸ்லிம்களின் நிம்மதிப் பெருமூச்சும்  கேள்விக்குறியாகியது!

ஆமாம், 2019 இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று இடம்பெறும் என்ற நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் என்பது போல் புவியரசியல் பின்புலத்தில் தேசிய அரசியல் மூலோபாய நகர்வுகளுக்காக பெருந்தேசியவாத இனமத வெறி சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் பலிக்கடாக்களாக, பகடைக்காய்களாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

அதன் உச்சகட்ட அரங்கேற்றமே முஸ்லிம் பெயர்தாங்கி கூலிப்படைகளைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள், அதன் பின்னர் முஸ்லிம் பிரதேசங்களில் கட்டவிழ்கப்பட்ட காடைத்தனங்கள், வன்முறைகள், ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், பாதுகாப்புத் தரப்புகளின் தீவிரப்படுத்தப்பட்ட கெடுபிடிகள், கைதுகள், பாராளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றின் விசாரணைகள், அழுத்தங்கள், இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள், மத்ரஸாக்கள் ஏன் அல்குர்ஆன் அரபு இஸ்லாமிய நூல்கள், பாட விதானங்கள், கொவிட் 19  ஜனாஸா எரிப்புகள்  என விதிக்கப்பட்ட பாகுபாடான கட்டுப்பாடுகள் என வரலாறுகாணாத சவால்களுக்கு முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்க நேரிட்டது.

என்றாலும், நாம் நோற்ற நோன்புகளையும், உயர்த்திய கரங்களையும் இறைவன் அங்கீகரித்துக் கொண்டான் என்பதற்கான அடையாளங்களை 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் போது எம்மால் உணர முடிந்தது.

என்றாலும், இடைக்கால அரசெனும் இரண்டு வருட இழுபறிக்குப் பின்னர் ஏற்பட்ட தேசிய மக்கள் எழுச்சிப் பிரவாகத்தில் முஸ்லிம் சமூகத்தில் கணிசமானோர் தம்மை இணைத்துக் கொண்டதற்கான பிரதான காரணமும் அவர்தம் ஆழ்மனதில் குடி கொண்டிருந்த மேற்படி கவலைகளும் ஏக்கங்களுமாகும்.

குறிப்பிட்ட ஒரு சிறுபான்மைச் சமூகம் பலிக்கடா ஆக்கப்பட்டாலும் இலக்கு வைக்கப்படுவது இந்த நாட்டின் இறைமையும் ஒருமைப்பாடும் அரசியல் ஸ்திரத் தன்மையும், பொருளாதார சுபீட்சமும் தான் என்பதனை நன்கு புரிந்து கொண்ட மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் மலர்ந்த ஆட்சியாகவே குறை நிறைகளுக்கும் சில பாகுபாடுகளுக்கு  மத்தியிலும் நாம் தேசிய மக்கள் சக்தி அரசையும் அதன் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளையும்  பார்கிறோம்.

அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான முறையான சுயாதீனமான விசாரணைகள் கிறித்தவ மக்களுக்கு மாத்திரமன்றி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கும் ஏமாற்றப்பட்ட ஒட்டு மொத்த தேச மக்களுக்கும் நீதியை நியாயத்தை நிலை நாட்டும் என நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்!

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 08.06.2026 || SHARE

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button