ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தாக்குதல் நடத்தின. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், கடந்த சில தினங்களாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் காரணமாக, “இந்தியர்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சிலர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, குவைத் அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான ஷைனப் தஸ்தி என்பவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக, ஈரானுக்கு ஆதரவாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். ஈரானுக்கு ஆதரவான இவருடைய இந்தப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறிய இந்த வழக்கில், ஈரானுக்கு ஆதரவாகக் கருத்துப் பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ் ஷைனப் தஸ்திக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதி செய்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


