எல் நினோ” (El Niño) காலநிலை மாற்றம், எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அவ்வப்போது அதிகரிப்பதால் ஏற்படும் “எல் நினோ” (El Niño) காலநிலை மாற்றம், எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் இந்நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை செயலில் இருக்கும் இந்த வானிலை நிலைமை, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்நாட்டில் நீடிக்கும் என்று அத்திணைக்களத்தின் முன்கணிப்பு பணிப்பாளர் மெல் மெண்டிஸ் தெரிவித்தார்.
இதன் அதிகபட்ச தாக்கம் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலும், அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்களிலும் அனுபவிக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எல் நினோ நிலைமை காரணமாக, எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறையக்கூடும். இதனால் தீவு முழுவதும் கடுமையான வெப்பமான வானிலையும் வறட்சியும் உருவாக வாய்ப்புள்ளது.
இந்நிலைமையானது நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்கும், நீர்மின் உற்பத்திக்கும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, தற்போதுள்ள நீர் இருப்புக்களை சிக்கனமாகவும், கடுமையான மேலாண்மையுடனும் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.



