இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து 2017 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் சுரேஷ் சலே மீது மட்டும் குற்றம் சுமத்த முற்படுவது தவறான விடயம் ; சாமர சம்பத்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் புலனாய்வுத் துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மீது மட்டும் சுமத்த முற்படுவது தவறானது எனப் புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ‘மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை முழுமையாகச் சுரேஷ் சலே மீது சுமத்த முயற்சிக்கப்படுகிறது. ஆனால், 2017-ஆம் ஆண்டிலேயே இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்தச் சபையில் எச்சரித்திருந்தார். ஆனால், அன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2019 ஏப்ரல் 21 அன்று தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்பாக, ஏப்ரல் 10-ஆம் திகதியே தாக்குதல் நடக்கப்போவதாகப் பிரமுகர்களின் மெய்ப் பாதுகாப்பாளர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. அக்காலத்தில் நான் ஊவா மாகாண முதலமைச்சராக இருந்தபோது, எனது மெய்ப் பாதுகாப்புப் பிரதானிக்கும் அந்தத் தகவல் கிடைத்தது.
அத்துடன், தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் கொழும்பில் பிடிபட்டபோது, அவரைச் சாய்த்தமருது நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சட்டத்தரணி தற்போது இந்த பாராளுமன்றத்தில் இருக்கிறார். எனவே, இத்தாக்குதலில் தொடர்புபட்டவர்கள் பலர் இருக்கையில், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் எவ்வாறு சுரேஷ் சலே மீது மட்டும் சுமத்த முடியும்?
மேலும், தற்போது குற்றப்புலனாய்வுத் துறையில் இருக்கும் சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இருவரும் அன்று பொலிஸ் சேவையில் இருந்தவர்களே. அவர்கள் தான் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வந்தார்கள். எனவே, இச்சம்பவம் குறித்துத் தெரிவிப்பதாயின் இன்னும் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.


