ஈரானுடன் இன்று ஒப்பந்தம் ஏற்படாவிட்டால்எம்மிடம் மாற்று வழி உள்ளது… அதை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டிய நிலை வராது என்று நம்புகிறோம் ; டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. அணுசக்தி திட்டங்கள், ஹோர்முஸ் நீரினை உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை.
மேலும் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவும், ஈரானும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்து இருந்தார்.
“ஈரானுடன் பராக் ஒபாமா செய்துகொண்ட ஒப்பந்தம், அணு ஆயுதத்தை அடைவதற்கான ஒரு எளிதான வகையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் தொடர்ந்திருந்தால், ஈரான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதத்தைப் பெற்றிருக்கும், மேலும் இந்நேரத்திற்குள் அதைப் பயன்படுத்தியும் இருக்கும்.
ஈரானுடனான எனது ஒப்பந்தம் இதற்கு நேர்மாறானது அணு ஆயுதமே இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் ஒரு வலுவான தடையாகும். சொல்லப்போனால், அவர்களுக்கு இனி அணு ஆயுதம் தேவையில்லை. வாங்குதல், சொந்தமாகத் தயாரித்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அவர்கள் அதை ஒருபோதும் பெறப்போவதில்லை. இந்த ஒப்பந்தம் நாளை (அதாவது இன்று (ஜூன் 14ம் திகதி)) கையெழுத்தாக உள்ளது.
கையெழுத்தான உடனேயே, ஹோர்முஸ் நீரினை அனைவருக்கும் திறந்துவிடப்படும். முந்தைய நிர்வாகங்கள் கொண்டிருந்த உறவை விட, ஈரானுடனான எங்கள் உறவு மிகவும் மாறுபட்டதாகவும் சிறப்பானதாகவும் உள்ளது. ஒபாமா அவர்களுக்கு வழங்கிய பல நூறு பில்லியன் டொலர்கள் போலன்றி, இதில் பணப் பரிமாற்றம் எதுவும் இருக்காது.
நிலைமை சீரடைந்ததும், சரியான நேரத்தில், எங்கள் அற்புதமான பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் திறமையான விமானிகளின் உதவியுடன், ஆழமான கிரானைட் மலைகளுக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அணுசக்திப் பொருட்களை நாங்கள் கைப்பற்றுவோம். பின்னர் அதை ஈரான் அல்லது அமெரிக்கா என எங்கு வேண்டுமானாலும் வைத்து அதன் வீரியத்தைக் குறைத்து அழித்துவிடுவோம்.
எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு ஈரானுடனும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்துடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புகிறோம். ஒருவேளை அது அப்படி அமையாவிட்டால், எங்களிடம் ஒரு இறுதிக்கட்ட மாற்று வழி உள்ளது. அதை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டிய நிலை வராது என்று நம்புகிறோம்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர்
இதனிடையே அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் (இன்று) இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்திருந்தார்.
ஒப்பந்தம் இறுதியானவுடன், மின்னணு முறையில் இரு நாடுகளும் கையெழுத்திட பாகிஸ்தான் ஏற்பாடுகளைச் செய்யும். இதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் இரு தரப்புக்கும் இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.



