தமிழ்–சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ – கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

இலங்கைத் திரையுலகில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராவண மகன்’ (தமிழ்) / ‘வீரா’ (சிங்களம்) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா அண்மையில் கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல நடன இயக்குநர் மாஸ்டர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம், பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. குட் பிரெண்ட்ஸ் சைன் புரொடக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கே. சிவா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
சிங்களத் திரையுலகின் மறைந்த முன்னணி நட்சத்திர நடிகரான ஜாக்சன் ஆண்டனி அவர்களின் புதல்வர் அகில தனுத்தர ஆண்டனி, இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அதேபோன்று, நடிகரும் இயக்குநருமான லிவிங்ஸ்டன் அவர்களின் புதல்வி ஜோவிதா பிலிப் லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் தசுன் பதிரண நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த பல திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களில் ஜெராட் நோயல், அரவிந்தன், இம்ரான், ருத்ரா, பேர்லிஜா, உமேஷ், பிரவீன், துஜா, மதனு கிருஷ்ணா, ஜினிஷ்காந்த், அனுஷன், வருண், தினேஷ், காண்டீபன் கிங்ஸ்லி, நவசீகரன், சாந்தா, வரதன், யுவன் நாதன், லிங்கராஜா மற்றும் பூமிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
திரைக்கதை மற்றும் இணை இயக்குநராக தமிழ்ச்செல்வன் சுப்பிரமணி பணியாற்ற, சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் வசன அமைப்பை ருத்ரா அமிர்தரெத்தினம் மேற்கொள்கிறார்.
ஒளிப்பதிவை நளிந்த விக்ரமசேகர மேற்கொள்கிறார். படத்தொகுப்புப் பணிகளை மல்லேஷ் கவனிக்கிறார். கா. கணேஷ் குமார் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். நடன இயக்குநராக வித்யாசாகர் சங்கரலிங்கம் இணைந்துள்ளார். ஒப்பனைக் கலைஞர்களாக கஸ்தூரி சிவலிங்கம் மற்றும் மேஷாக் சகாயராஜா பணியாற்றுகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். அவற்றை ஆண்டனிதாஸ் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர். மகனுக்குத் தந்தையின் தாலாட்டாக பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள பாடலை ஆண்டனிதாஸ் பாடியுள்ளார். அந்தப் பாடல் தனது பாடல் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்தப் பாடலைப் பாடும்போது ஆண்டனிதாஸ் கண்கலங்கிய தருணம் பாடலின் உணர்வுபூர்வமான ஆழத்திற்கு சாட்சியாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இத்திரைப்படத்தில் இடம்பெறும் மற்றுமொரு பாடலை பாடலாசிரியர் சதீஷ்காந்த் எழுதியுள்ளார். அந்தப் பாடலை சத்ய பிரகாஷ் மற்றும் பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய திரையுலகக் கலைஞர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சியாக உருவாகி வரும் ‘ராவண மகன் / வீரா’ திரைப்படம், தமிழ்–சிங்கள சினிமா உலகின் புதிய கூட்டணிக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இரு மொழித் திரைப்பட ரசிகர்களிடையிலும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், இலங்கைத் திரையுலகில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



