வைத்தியராக தன்னைக்காட்டிக் கொண்டு கோடிக்கணக்கில் பண மோசடி செய்த (53 வயது திருமணமாகாத) பெண் ஒருவர் பொலிசாரால் கைது

உள்நாட்டு மற்றும் மேலைநாட்டு மருத்துவர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்துள்ளதாகக் கூறி, அந்த மருந்துகளை கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்குப் பணம் தேவை எனக் குறிப்பிட்டு சுமார் ஆறு கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிரிபாவ பகுதியில் வசித்து வந்த, பின்னர் ஹொரண வீடமைப்புத் தொகுதியொன்றில் வசித்து வந்ததாகக் கூறப்படும் 53 வயதுடைய திருமணமாகாத பெண் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பெண் உள்நாட்டு மற்றும் மேலைநாட்டு மருத்துவர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மக்களுக்கு மருந்துகளை வழங்கியுள்ளதாகவும், அந்த மருந்துகள் இலங்கையில் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்படாத தரமற்ற மருந்துகள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவர் மருத்துவர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



