News

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெறும் சம்பவங்களை காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவம் என தலைப்பிடும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகவியளாலர்களுக்கு பகிரங்க கண்டனம்.

♦️ஊடக தர்மத்தை மீறும் செய்தித் தலைப்புகள், காத்தான்குடி மக்களின் நிம்மதியைக் குலைக்கும் ‘பொலிஸ் எல்லை’
சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பின் பகிரங்க கண்டனம்.



அண்மைக்காலமாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள், பொலிஸ் சுற்றிவளைப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகும் விதம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

செய்திகளை வெளியிடும் பிரதான ஊடக நிறுவனங்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய சமூக வலைத்தளப் பக்கங்கள் இச்செய்திகளுக்குத் தலைப்பிடும் போது காட்டும் அலட்சியப்போக்கு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது குறிப்பாக “முஸ்லிம் சமூகத்தின் மீது” திட்டமிட்ட அவதூறைப் பரப்புவது போல் அமைந்துள்ளதாக சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு தனது கடுமையான கண்டனத்தை விடுத்துள்ளது.



இவ்விடயம் தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை பின்வருமாறு,

ஊடகங்கள் மற்றும் முகநூல் பக்கங்களை நடத்துவோர் செய்யும் மிகப்பெரிய தவறு அல்லது திட்டமிட்ட அலட்சியம் என்னவெனில், ‘காத்தான்குடி பொலிஸ் பிரிவு’ (Kattankudy Police Division) என்ற நிர்வாக எல்லையையும், ‘காத்தான்குடி’ (Kattankudy) என்ற ஊரையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக நீண்டதொரு பரப்பளவைக் கொண்டதே காத்தான்குடி பொலிஸ் பிரிவாகும்.
இது கல்லடிப் பிரதேசம் தொடக்கம் களுவாஞ்சிக்குடி எல்லை வரையான நீண்ட கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.

இப்பொலிஸ் பிரிவின் கீழ் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கிராமங்களும் (ஊர்கள்) 51 கிராம சேவகர் பிரிவுகளும் (G.N. Divisions) நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன. 

இந்த 20 ஊர்களில் காத்தான்குடி என்பது வெறும் ஒரு பகுதி மாத்திரமேயாகும். ஏனைய 19 ஊர்களும் வெவ்வேறு சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளாகும்.

கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி அல்லது களுவாஞ்சிக்குடி எல்லைக்குட்பட்ட ஏதோவொரு கிராமத்தில் ஒரு கஞ்சா வியாபாரியோ, திருடனோ அல்லது சட்டவிரோத செயலில் ஈடுபட்டவரோ கைது செய்யப்பட்டால், ஊடகங்கள் வைக்கும் தலைப்பு இவ்வாறு அமைகிறது “காத்தான்குடியில் பெரும் போதைப்பொருள் கடத்தல்: ஒருவர் கைது!”அல்லது “காத்தான்குடியில் குற்றச்செயல்!”
இவ்வாறான பொறுப்பற்ற, பரபரப்புக்காக இடப்படும் தலைப்புகள் சமூகத்தில் பின்வரும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.



குற்றம் செய்த நபர் வேறு ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், தலைப்பில் ‘காத்தான்குடி’ என்று வருவதால், அந்த ஊரில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் குற்றவாளிகள் போன்றதொரு பிம்பம் பொதுவெளியில் உருவாக்கப்படுகிறது.

சட்டத்தை மதித்து, அமைதியாக வாழும் பல்லாயிரக்கணக்கான காத்தான்குடி மக்கள், வெளி ஊர்களுக்குச் செல்லும் போதோ அல்லது ஏனைய சமூகத்தினருடன் பழகும் போதோ தங்களைச் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போல சமூகம் பார்க்கிறதோ என்ற தேவையற்ற மன நெருக்கடிக்கும், நிம்மதியற்ற சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள்.

பிற சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியில் காத்தான்குடி பிரதேசம் பற்றிய ஒரு தவறான அச்சத்தையும், வெறுப்பையும் இச்செய்தித் தலைப்புகள் விதைக்கின்றன.

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் இன, சமூக நல்லிணக்கத்திற்குப் பெருமச்சுறுத்தலாக அமைகிறது.
தொடர்ச்சியாக ஏனைய ஊர்களில் நடக்கும் குற்றங்களை வேண்டுமென்றே காத்தான்குடியோடு முடிச்சுப் போட்டுச் செய்தி பரப்புவது, தற்செயலான அறியாமை அல்ல, மாறாக ஒரு பிரதேசத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் திட்டமிட்ட பிரசாரமா என்ற பலத்த சந்தேகத்தையும் சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு எழுப்புகிறது.



ஊடக சுதந்திரம் என்பது நாட்டின் சட்ட ஒழுங்கையும், மக்களின் தனிமனித கௌரவத்தையும் மதித்து நடப்பதே ஆகும். எனவே, செய்தி ஊடகங்கள் உடனடியாகப் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு வலியுறுத்துகிறது.

குற்றச்சம்பவம் எங்கு நடந்ததோ, அந்த குறிப்பிட்ட கிராமத்தின் அல்லது வீதியின் பெயரைத் தலைப்பில் குறிப்பிட வேண்டும்.

பொலிஸ் பிரிவின் பெயரைக் குறிப்பிட வேண்டிய சட்டத் தேவை இருப்பின், தலைப்பிலோ அல்லது செய்தியின் முதலாவது பந்தியிலோ, “காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…” என்று வாசகர்களுக்குத் தெளிவாகப் புரியும் வகையில் எழுத வேண்டும்.

குறிப்பாக முகநூல் (Facebook), யூடியூப் (YouTube) மற்றும் டிக் டொக் (TikTok) போன்ற தளங்களில் அவசர அவசரமாகப் ‘வியூஸ்’ மற்றும் ‘லைக்குகளைப்’ பெறுவதற்காக ஒரு பிரதேசத்தின் கௌரவத்தைச் சூறையாடும் தலைப்புகளை இடுவதை இளைய தலைமுறை ஊடகவியலாளர்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு எந்தவொரு ஊரோ, மதமோ அல்லது சாதியோ கிடையாது. குற்றம் செய்தவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஆனால், அவர் செய்யும் குற்றத்திற்காக அவர் வாழும் அல்லது கைது செய்யப்பட்ட பொலிஸ் பிரிவின் பெயரால் ஒட்டுமொத்தப் பிரதேச மக்களையும் பழிவாங்குவது நாகரீகமான ஊடகவியல் அல்ல.

சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பின் இந்த வேண்டுகோளானது, வெறுமனே ஒரு ஊருக்கான குரல் அல்ல; இது ஒட்டுமொத்த ‘காத்தான்குடி பொலிஸ் பிரிவில்’ வாழும் மக்களுக்கானதாகும். இனிவரும் காலங்களிலாவது பிராந்திய மற்றும் தேசிய ஊடகங்கள் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு, பொறுப்புடன் செய்தி வெளியிடும் என நாம் எதிர் பார்க்கின்றோம்.

சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு.
ஊடகப் பிரிவு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button