எரிபொருட்களினால் அரசாங்கத்திற்கு இன்னும் நஷ்டம்… ஆகஸ்ட், செப்டம்பரில் விலை குறைக்க முடியும்..
உலக சந்தையில் தற்போதைய எரிபொருள் விலைகள் எதிர்வரும் காலங்களிலும் இதே மட்டத்தில் நிலையாக இருந்தால், அதன் பலனை எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டின் நுகர்வோருக்கு வழங்க அரசாங்கத்தால் முடியும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் விலைகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர்,
எரிபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் எந்தவொரு எதிர்பார்ப்போ அல்லது நோக்கமோ தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று வலியுறுத்தினார்.
மக்கள் மீதான பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே எரிபொருளுக்கு கணிசமான அளவு மானியங்களை வழங்கி வருவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதும் ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாயும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 ரூபாயும் அரசாங்கத்தினால் மானியமாகப் பொறுப்பேற்கப்பட்டு வருவதாகவும் வெளிப்படுத்தினார்.
உலக சந்தையில் விலைகள் குறைந்தவுடன், சாதாரண சந்தையில் இருந்து பொருட்களை வாங்குவதைப் போல உடனடியாக எரிபொருளை வாங்க முடியாது என்றும், அதற்கு முன்னர் உடன்பட்ட விலைகளின் கீழ் முறையான டெண்டர் நடைமுறையைப் பின்பற்றி எரிபொருள் ஓர்டர்களை (Orders) செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் விளக்கமளித்தார்.



