மர்ம நபர் ஒருவர் என்னையும் என் இரு பிள்ளைகளையும் மீண்டும் மீண்டும் கண்காணித்து பின் தொடர்கிறார் – திருமதி சுரேஷ் சலே முறைப்பாடு

சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்புடைய, சிவில் உடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்காணிப்பில் ஈடுபடும் நபர் ஒருவர், தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் மீண்டும் மீண்டும் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்று (20) தனது 17 வயதுடைய மகளும் 22 வயதுடைய மகனும் தங்களது தந்தையின் நலம் விசாரிப்பதற்காக தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது, அந்த நபர் தமது பிள்ளைகளைப் பின்தொடர்ந்து சென்று தனது கைத்தொலைபேசி மூலம் அவர்களின் புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ எடுத்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு முன்னரும் தேசிய வைத்தியசாலைக்கு அருகிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு அருகிலும் அவர் நடமாடியதை அவதானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், இது குறித்து சுயாதீன விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நபர் யார் என்பதை அடையாளம் காணுமாறும், யாருடைய அறிவுறுத்தலின் பேரில் இத்தகைய செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துமாறும் மனோரி சலே, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையிடம் கோரியுள்ளார்.



