பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் ரிஷாட் ரபீக் இராஜினாமா!

ஐக்கிய தேசியக்V கூட்டமைப்பின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் மொகமட் ரபீக் மொகமட் ரிஷாட் (ரிஷார்ட் ரபீக்) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா கடிதத்தை கண்டி மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் உறுதிப்படுத்தி தனக்கு அறிவித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் மஸீஹுத்தீன் நயீமுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 மே மாதம் 06 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த ஒரு வெகுமதி ஆசனத்திற்காக ரிஷாட் ரபீக் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான கே.எம். யாஸீன் அவர்களது வேண்டுகோளின் பிரகாரம் வேட்பாளர்களிடையே பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்தளிப்பதாக தேர்தலுக்கு முன்பே உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. அந்த உடன்பாட்டினை மதித்து, தனது ஒரு வருட பதவிக் காலம் பூர்த்தியானதும், பிறிதொரு வேட்பாளருக்குச் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கும் நோக்கிலேயே ரிஷாட் ரபீக் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
இதேபோன்ற உடன்பாடுகளின் அடிப்படையில் ஏனைய பிரதேச சபைகளுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் ரிஷாட் ரபீக் நடந்துகொண்டுள்ளார் என்றும், இது குறித்து கட்சியின் தலைமைத்துவம் பெருமையடைவதாகவும் செயலாளர் நாயகம் நயீமுல்லாஹ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட எழுத்துமூல புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில், இரு கட்சிகளும் இணைந்து ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் ‘தராசு’ சின்னத்தின் கீழ் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபைக்காகப் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



