காணாமல் போன 25 இலட்சம் டொலர் என்ன ஆனது? அரசாங்கம் ஏன் மெளனம்? சஜித் கேள்வி

நமது நாடு செலுத்த வேண்டியிருந்த 25 இலட்சம் டொலர் தவணைப் பணம் அண்மையில் காணாமல் போனது. மோசடியான முறையில் நாடு அதனை இழந்தது. இதன் சுமையை நாட்டின் வரி செலுத்துவோர் சுமக்க வேண்டியுள்ள போதிலும், இது குறித்து இதுவரை முறையான தகவல் எதுவும் இல்லை.
இது தொடர்பாக பாராளுமன்றத்திற்கு முறையான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (26) உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் நிதி குற்றங்களை அரங்கேற்றி வருவதைப் போன்றே, நிதி நிறுவனக் கட்டமைப்பிற்குள் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக அப்பாவி வைப்பாளர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். உதாரணமாக மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமான சென்ட்ரல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்ட நேரத்தில், சுமார் 4200 வைப்பாளர்களுக்கு அதனால் அநீதி இழைக்கப்பட்டது.
நிறுவனம் பின்னர், இரு கட்டங்களாக 5 இலட்சம் மற்றும் 6 இலட்சம் வீதம் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்தப்பட்ட போதிலும், நிறுவனத்தைக் கலைக்கும்போது வைப்பாளர்களுக்கு மிகவும் சோகமான விதியே நேர்ந்துள்ளது. முதலில் கலைப்பாளரின் செலவுகள், இரண்டாவதாக மத்திய வங்கிக்குச் சேர வேண்டிய பணம், மூன்றாவதாக நிறுவனத்தின் ஏனையோரின் பொறுப்புகள் மற்றும் அதன் பின்னரே வைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன.
எனவே தற்போதாவது இந்த வைப்பாளர்களுக்கு முன்னுரிமை பெற்றுக் கொடுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுங்கள். அது சாத்தியமில்லை என கருதும் பட்சத்தில் வைப்புத்தொகை மற்றும் வட்டி வருமானத்திற்கு விசேட நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
CIFL நிறுவனத்தைப் போலவே, தற்போது நேஷன் லங்கா பைனான்ஸ் நிறுவனத்தின் 1000 க்கும் மேற்பட்ட வைப்பாளர்களும் இதேபோன்ற திகைப்பிற்குள்ளாகியுள்ளனர். சிங்ஹபுத்ர பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட இந்நிறுவனம், 2022 இல் கேண்ட்ரிச் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் அனைத்தினதும் பணிப்பாளர் பதவிகளை ஒரேயொரு குழுவினரே வகித்துள்ளது. உறுதிமொழிப் பத்திரங்கள் மூலம் கணக்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட போதிலும், ‘சிங்ஹ கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட்’ எனப்படும் நிறுவனத்தின் உரிய முகவரியில் அத்தகைய ஒரு நிறுவனம் இயங்கவில்லை.
மத்திய வங்கி வைப்புகளை சேகரிப்பதற்குத் தடை விதித்திருந்த போதிலும், புதிய வைப்புப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வைப்பாளர்களுக்குப் பணமோ வட்டியோ கிடைத்தபாடில்லை. இப்போது இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்கின்றன. இது ஒரு நிதி குற்றமாகும். பல்வேறு செல்வாக்குமிக்க தரப்பினர் இதில் ஈடுபட்டுள்ளதால் உண்மைகளைக் கண்டறிந்து, இந்த அநீதிக்குள்ளான வைப்பாளர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். இவர்களுக்கு எதிராகச் சரியாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் கூறியுள்ளார்.



