News

அன்றைய மன்னர்கள் இந்த  நாட்டுக்காக,  நாட்டைக் காப்பதற்காக தமது உயிரையே பணயம் வைத்து சேவை செய்தனர் ; சஜித்

பண்டைய மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக மன்னர்களும் அமைச்சர்களும் உன்னத சேவைகளை ஆற்றினர். நாட்டுக்கு பல்வேறு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் நாட்டைக் காப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து சிறந்த சேவையாற்றினர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



சிதுல்பவ்வ மகுல் மகா விகாரையின் ஆலோக பூஜை நிகழ்வில் நேற்று இரவு கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.







அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,



இன்றைய உலகில் நிலவும் உலகளாவிய புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இந்தியப் பெருங்கடல் அமைதி வலயமாவதற்குப் பதிலாகப் போர் அபாயத்திற்கு ஆளாகி காணப்படுகின்றது. அமைதி வலயமாய் இருந்த இந்தியப் பெருங்கடல் ஒரு கட்டத்தில் போரின் தாக்கத்திற்கும், மற்றொரு கட்டத்தில் பனிப்போரின் தாக்கத்திற்கும் உள்ளாகி காணப்படுகின்றது.



புவிசார் அரசியலில் நிலவும் போட்டித்தன்மை காரணமாக எமது நாடும் கடுமையான அபாயத்திற்குள்ளாகியிருப்பதுடன், 7 வருடங்களுக்குள் ஒரு நாடு என்ற ரீதியில் ஐந்து பெரும் பேரழிவுகளுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான பேரழிவுகளால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை காரணமாக, இந்த புவிசார் அரசியலுக்கு நாடு பலியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டுக்குள் என்னதான் அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துக்கள் நம்மத்தியில் இருந்தாலும், பல்வேறு உலகளாவிய புவிசார் அரசியல் சவால்களுக்கு எமது நாடு அடிபணியாமல் இருக்க இலங்கை பிரஜைகளாகிய நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.



இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி பேதமின்றி ஆள்புலப ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை மன்னராட்சிக் காலத்தைப்போலப் பாதுகாக்க வேண்டும். அன்று பாதுகாக்கப்பட்ட அந்த சுதந்திரத்தையும், சுய ஆதிக்கத்தையும் நாம் இன்றும் பாதுகாக்க வேண்டும்.



அன்று நிலவிய நேரடி ஏகாதிபத்தியத்தைப் போலவே இன்று மறைமுக ஏகாதிபத்தியம் பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அதற்கு நாம் ஒன்றாய் இணைந்து முகங்கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கூறியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button