News

கடந்த அரசாங்கங்களின் போது சுங்கத் தீர்வைத் தவிர்த்து, மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான ஆடம்பர வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகனுக்கு வலைவீச்சு #இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆடம்பர வாகனக் கடத்தல் மோசடி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்திற்குச் சொந்தமான தினமின (Dinamina) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி அல்லது இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.

தினமின பத்திரிகையின் படி, கடந்த அரசாங்கங்களின் போது சுங்கத் தீர்வைத் தவிர்த்து, மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான ஆடம்பர வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

கப்பல் கொள்கலன்களுக்குள் மறைத்து பல வாகனங்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றில் சில அரசியல் செல்வாக்குமிக்க நபர்களின் பிள்ளைகளால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊழல் அதிகாரிகளின் உதவியுடன் இந்த வாகனங்களில் சில பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு பதிலாக, பின்னர் அந்த வாகனங்களுக்கான சுங்கத்தீர்வை செலுத்தப்பட்ட சம்பவங்களை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகவும் தினமின செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறானதொரு வாகனம் முன்னதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டு, ஸ்ரீலங்கா சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது தற்போதும் அவர்களின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதியின் மகன் அடுத்த வாரம் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த விசாரணை தொடர்பில் பொலிஸாரோ அல்லது குற்றப்புலனாய்வுத் திணைக்களமோ இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button