பொருளாதார வளர்ச்சியை 8% ஆக உயர்த்த திட்டம்

தற்போது 5% மட்டத்தில் காணப்படும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் 7% – 8% மட்டம் வரை கொண்டு வருவதற்கு உழைக்க வேண்டும் என்றும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (Electronics) துறைகளின் பரந்த பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அනුர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறைகளின் முன்னணி சங்கங்கள், தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அනුர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டு தொழிலதிபர்களை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் உண்மையான ஆற்றலை வென்றெடுப்பதற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழில்முனைவோருக்கும் அழைப்பு விடுத்தார். மேலும், இந்த இலக்கை அடைவதற்கான தங்களது ஆலோசனைகள் மற்றும் இத்துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக அடுத்த ஆண்டில் மூலதனச் செலவினமாக (Capital Expenditure) 2 டிரில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் ஏற்படும் டொலர் தேவையப் பூர்த்தி செய்ய ஏற்றுமதித் துறையின் பங்களிப்பை அரசாங்கம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்காக தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் இருந்து பெறக்கூடிய பரந்த பங்களிப்புகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
தற்போது இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருவாய் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் ஆண்டுக்கு 5 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தற்போது சுமார் 500 மில்லியன் டொலராக இருக்கும் மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறையின் ஏற்றுமதி வருவாயை 2 பில்லியன் டொலர் வரை உயர்த்தக்கூடிய ஆற்றல் உள்ளதாகவும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் இலங்கையை ஒரு உலகளாவிய பிராண்டாக (Global Brand) மாற்றுவதன் அவசியம் குறித்தும், இரு துறைகளுக்கும் தேவையான உயர்மட்ட மனிதவளம் இலங்கையிடம் உள்ளதால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இத்துறைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப பாகங்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்கள், கொழும்பு துறைமுக நகரத்தை (Port City) சார்ந்த நிறுவனங்கள் வங்கி முறைமையுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில் உள்ள தடைகள் மற்றும் உள்நாட்டு வணிகர்களின் உற்பத்திகளை உள்நாட்டு சந்தையில் ஊக்குவிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் குறித்து வணிகர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். இந்தத் தடைகளை நீக்குவது மற்றும் சட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தொழிலதிபர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய ஒரு சிறப்புப் பிரிவை (Special Unit) நிறுவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இத்துறைகளின் வசதிகளை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கத்தால் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது வணிகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.



