News

வரித் தளத்தை விரிவுபடுத்துமாறு அரசாங்கத்திற்கு IMF அறிவுறுத்தல்..

எவன் பபாஜோர்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று, 2026 ஜூன் 24 முதல் 30 வரை கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டது. அண்மைய மாகாே பொருளாதாரப் போக்குகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தில் அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

விஜயத்தின் முடிவில் பபாஜோர்ஜியோ பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்:

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிசக்தி விலைகள் அதிகரித்தமையால், 2026 பிப்ரவரி மாதத்தில் 1.6 சதவீதமாக இருந்த வருடாந்த பணவீக்கம், 2026 மே மாதமளவில் 5.5 சதவீதம் வரை அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை மந்தமடைந்ததுடன், மொத்த சர்வதேச கையிருப்பு சேகரிப்பு வேகமும் வீழ்ச்சியடைந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதத்தை 100 புள்ளிகளால் உயர்த்தியதுடன், மாகாே விவேகமான நடவடிக்கைகளையும் செயல்படுத்தியது.

எரிபொருள், மின்சாரம் மற்றும் உர மானியங்கள், அத்துடன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பண உதவி ஆகியவற்றை உள்ளடக்கிய, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்ட தற்காலிக நிவாரணப் பொதி ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்து அதிக மட்டத்தில் இருந்தபோதிலும், அண்மைக் காலத்தில் உலகளாவிய பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, வெளிவாரி அழுத்தங்களின் தாக்கம் ஓரளவுக்குக் குறைவடைந்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்வதற்கும், அரசாங்க நிதி மற்றும் வெளிநாட்டுத் துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் சீர்திருத்த செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் அவசியமாகும். 2026 ஆம் ஆண்டில் தளர்த்தப்பட்ட நிதிவழிக் கொள்கையை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து, மாகாே பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, 2027 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.3 சதவீதமான முதன்மை இருப்பு இலக்கை மீண்டும் அடைவதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

வரி இணக்கத்தை மேம்படுத்துதல், வரித் தளத்தை விரிவுபடுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள செலவுகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுத்தல் உள்ளிட்ட பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

‘டித்வா’ (Ditwa) சூறாவளிக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதையும் மீண்டும் கட்டியெழுப்புவதையும் திறம்பட மேற்கொள்வதற்கு, பேரிடர் தொடர்பான உதவிகள் உள்ளிட்ட நிதி ஒதுக்கீட்டுச் செலவுகளில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது அவசியமாகும். நிதி அபாயங்களைக் குறைப்பதற்காக, அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதும், செலவுகளை ஈடுசெய்யக்கூடிய எரிசக்தி விலை நிர்ணயத்தைப் பேணுவதும் முக்கியமாகும். அதேபோல், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக, சமூகப் பாதுகாப்பு வலைகளை முறையாக இலக்கு வைப்பதிலும் அவற்றின் உள்ளடக்கத்தைப் போதுமானதாகப் பேணுவதிலும் அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறை அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதுடன், விவேகமான கடன் மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிக்கவும், உள்நாட்டு கடன் சந்தையை விரிவுபடுத்தவும், இலங்கை மீண்டும் சர்வதேச மூலதன சந்தையை அணுகுவதற்கு ஆதரவளிக்கவும் பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் நிறுவன ரீதியான திறனை மேம்படுத்த வேண்டும்.

உயர் மட்டத்தில் உள்ள உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், விலை ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, நாணயக் கொள்கையானது விவேகமானதாகவும், மாறும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப விரைவாக மாறக்கூடியதாகவும், தரவுகளின் அடிப்படையிலானதாகவும் இருக்க வேண்டும். அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் போது, வெளிநாட்டு இருப்புச் சேகரிப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு வெளிநாட்டு மாற்றங்களை ஆதரிப்பதற்கு, வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது மிகவும் முக்கியமாகும். வெளிநாட்டு நாணய சந்தையிலான தலையீடுகள் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டும். செலுத்தல் சமநிலை கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட வேண்டும். நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, செயல்பாட்டு அபாய மேலாண்மை, இணையப் பாதுகாப்பு, பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

அதிர்ச்சிகளைத் தாங்கும் திறனை உருவாக்குவதற்கும், வலுவான, நீடித்த மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும், நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியமாக செயல்படுத்தப்பட வேண்டும். அத்துடன், வரி முறையின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மையை மேம்படுத்துதல், வர்த்தகக் கொள்கைகளைத் தளர்த்துதல், தொழிலாளர் சந்தை சார்ந்த சவால்களைக் குறைத்தல், முதலீடுகளை ஈர்த்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வறுமை விகிதத்தைக் குறைக்கக்கூடிய வகையில் வணிகச் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு வலுவான கொள்கைகள் அவசியமாகும்.

இலங்கையின் திட்டத்தின் செயல்வடிவம், விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) ஏழாவது மதிப்பாய்வின் போது உத்தியோகபூர்வமாக மதிப்பிடப்படும். இந்த தூதுக்குழுவின் அடுத்த விஜயம் நடைபெறும் காலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்…”

Recent Articles

Back to top button