News

நடந்தது நடந்து விட்டது! நாம், தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஆரம்பித்த சட்டபடியான மலையக காணி உரிமை கொள்கையை முன்னே கொண்டு செல்லும் படித்தான் இன்று அனுரகுமரா அரசாங்கத்தை கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் கோருகிறேன். 

“மலையக காணி உரிமை” பற்றி தம் உண்மை கொள்கையை அனுர அரசு  அறிவிக்க வேண்டும்.

<கொள்கை வரும்வரை பலவந்த வெளியேற்றம் இடைநிறுத்த பட வேண்டும்- மனோ கணேசன்>

பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், பேசி, பேசியே, காலத்தை கடத்தியது போதும். இது தொடர்பில் தமது உண்மையான கொள்கை என்ன என்பதை அனுர அரசு இனியாவது உடனடியாக அறிவிக்க வேண்டும். இதை நான் திரும்ப, பலமுறை பாராளுமன்றத்திலும், வெளியேயும் கூறி விட்டேன்.
இப்போது மீண்டும் கூறுகிறேன்.

நீங்கள் உங்கள் “ஹட்டன் பிரகடனத்தில் கூறி, வாக்கு வாங்கிய, மலையக காணி உரிமை என்ற கொள்கை என்னாச்சு?”, எனவும் ஆளுகின்ற அனுர அரசை கேட்கிறேன், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நாம் கோருவது, களியாட்ட விடுதிகளை கட்ட அல்லது, ஆடம்பர பண்ணை வீடுகளை கட்ட ஏக்கர் கணக்கில் காணி அல்ல. தம் 200 ஆண்டுகால உழைப்பினால், வெளிநாட்டு வருமானம் கொட்டும், பெருந்தோட்டங்களை உருவாக்கிய மக்களும், அவர்களது பரம்பரையினரும், இன்று, பெருந்தோட்ட பிரதேசங்களில், தோட்ட தொழிலாளர்களாகவும், வேறு தொழில் முயற்சியாளர்களாவும், வாழ்கிறார்கள். அவர்களுக்கு வதிவிட மற்றும் வாழ்வாதார காணி துண்டுகள், அவசியம் என்பதே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கை ஆகும்.

“லயன் குடியிருப்புகளை தவிர்த்து, மலையக மக்கள் வாழும் காணிகள் சட்ட விரோதமானவை” என அரசாங்கம் நினைக்கிறதா?

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. தமது மன்றில் முன் வைக்க படும், சட்ட ஆவணங்களை வைத்தே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன.  அதேபோல், பெருந்தோட்ட நிறுவனங்கள் குண்டர் படையை வைத்து, அத்து மீறிய குடியேற்றங்கள் என மலையக மக்கள் வாழும் குடிசை குடியிருப்புகளை உடைக்கின்றன.

இவை பற்றி தமக்கு எதுவுமே தெரியாது என்பதை போன்று, ஜனாதிபதி அனுர திசாநாயக்க, அமைச்சர் சமந்த வித்தியாரத்ன முதல் அரசில் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும், முழு, அரை, கால், மந்திரிகள், இனிமேலும் நாடகம் நடிக்க கூடாது.

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி பிரதீப் சுந்தரலிங்கம், ஆகியோர் நடத்தும் பெருந்தோட்ட அமைச்சில், தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவு (Plantation Management  Monitoring Division-PMMD) என்று ஒரு பிரிவு  இருக்கிறது. இதற்கு மேல் காணி சீர்-திருத்த ஆணைக்குழு (Land Reform Commission) என்ற ஒரு அரச நிறுவனமும், காணி அமைச்சில் இருக்கிறது.

தோட்டங்களில், வீடில்லா நமது மக்கள் கட்டும் கட்டுமானங்களை, “அத்துமீறியவை: என்று கூறி வழக்கு போட அல்லது தடுத்து நிறுத்த அல்லது உடைத்து அகற்ற, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு, இந்த அரசாங்க நிறுவனங்கள்தான் அனுமதி அளிக்கின்றன.

ஏனென்றால், தோட்ட காணிகள், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானவை அல்ல. அவை அரசுக்கே சொந்தம். பெருந்தோட்ட நிறுவனங்கள் அங்கே நீண்டகால குத்தகைக்கே இருக்கின்றன. ஆகவே மலையக  காணி உரிமை பற்றிய சட்ட உரிமை அரசாங்களுக்கே இருக்கின்றன.

இந்த அடைப்டையில்தான், நல்லாட்சியின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி, அரசாங்கத்துக்கு உள்ளே போராடி “ஏழு பேர்ச் காணி, தனி வீடு” என்ற சட்டபடியான உரிமையை அமைச்சரவை அனுமதி, பாராளுமன்ற ஒப்புதல், என சட்டப்படி ஆரம்பித்தது. 200 வருட கால கொடுமையை நான்கே வருடங்களில் தீர்த்து விட முடியாது என்பது புத்தி உள்ள எவருக்கும் புரிய வேண்டும். ஆனால், மலையக காணி உரிமை இயக்கத்தை சட்டப்படி நாம்தான் ஆரம்பித்தோம். இப்படி உரிமை இயக்கத்தை ஆரம்பித்த எங்களை தள்ளி வைத்து விட்டுத்தான் நமது மக்களும், தேவ-தூதர்கள் வந்தார்கள், என இந்த அரசுக்கு வாக்களித்தார்கள்.

சரி நடந்தது நடந்து விட்டது! நாம், தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஆரம்பித்த சட்டபடியான மலையக காணி உரிமை கொள்கையை முன்னே கொண்டு செல்லும் படித்தான் இன்று அனுரகுமரா அரசாங்கத்தை கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் கோருகிறேன்.  

அதற்கு அரசின், மலையக காணி உரிமை பற்றிய உண்மையான கொள்கை என்ன என்பது ஒளிவு மறைவு இல்லாமல், இனிக்கும் வார்த்தை ஜாலங்கள் இல்லாமல், பகிரங்கமாக அறிவிக்க பட வேண்டும்.

அதுவரையில், வீடில்லா நமது மக்கள் பெருந்தோட்ட பிரதேசங்களில் கட்டும் கட்டுமானங்களை, “அத்துமீறியவை” என்று கூறி வழக்கு போடும், அல்லது தடுத்து நிறுத்தும், அல்லது உடைத்து அகற்றும், நடவடிக்கைகள் இடைநிறுத்த (Moratorium) பட வேண்டும். இவைதான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button