மதுபான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, 27.5 மில்லியன் ரூபாயைப் பெற்று மோசடி செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜயலத் பண்டார திஸாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டியவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் 27.5 மில்லியன் ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CCIB) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று (14) ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் வைத்து திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
58 வயதுடைய சந்தேகநபர் இன்று (15) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



