News

அநுரவுக்கு மக்கள் ஆதரவு இருமடங்காக அதிகரிப்பு; சஜித் வசம் இருந்த ஆதரவு வீழ்ச்சி

மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் (CPA) சமூக குறிகாட்டிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட புதிய கருத்துக்கணிப்பின் மூலம், இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து நாட்டின் 75.5% மக்கள் தங்களின் பேராதரவை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

‘ஜனநாயக ஆட்சி மீதான நம்பிக்கை’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயல்பாடுகள் குறித்த மக்கள் ஆதரவு 29.4% என்ற குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகள் குறித்து 64.9% மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், ஜனாதிபதிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தவர்களின் எண்ணிக்கை வெறும் 23.3% மட்டுமே ஆகும்.

ஜனாதிபதி மீது அதிகபட்ச ஆதரவு மலையகத் தமிழ் சமூகத்தினராலும் (94.4%) மற்றும் முஸ்லிம் சமூகத்தினராலும் (93.4%) வழங்கப்பட்டுள்ளது. சிங்கள சமூகத்தினரிடையே ஜனாதிபதிக்கான ஆதரவு 69.9% ஆக உள்ளது. அத்துடன், 18-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களில் 81.6% பேர் ஜனாதிபதியின் ஆட்சி குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிராமப்புற மக்கள் மத்தியில் இந்த ஆதரவு வீதம் 76.4% ஆகப் பதிவாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் குறித்து 51.6% மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அதிக நம்பிக்கை முஸ்லிம் (73.3%) மற்றும் மலையகத் தமிழ் (72.2%) சமூகங்கள் மத்தியில் காணப்படுவதுடன், சிங்கள சமூகத்தினர் மத்தியில் இந்த நம்பிக்கை 46.4% ஆக உள்ளது. மேலும், தேசிய மக்கள் சக்தியின் திறமையான ஆட்சி நடத்தும் திறன் குறித்து 62.8% மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்கள் கருத்துக்கள் பிளவுபட்டுள்ளதை இந்த ஆய்வு காட்டுகிறது. இதுகுறித்து 45.3% பேர் திருப்தி வெளியிட்டுள்ள அதேவேளை, 44% பேர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் 64.1% பெரும்பான்மையான மக்கள் உடன்பட்டுள்ள போதிலும், அந்தச் செயல்முறையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வெறும் 23.6% மக்கள் மட்டுமே கருதுகின்றனர்.

மேலும், அனர்த்த நிவாரணம் மற்றும் புனரமைப்புப் பணிகள் குறித்து 68.6% மக்கள் திருப்தி அடைந்துள்ளதோடு, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முக்கியம் என்று 67% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 1,240 நபர்களைப் பங்கேற்கச் செய்து மே 23 முதல் ஜூன் 18 வரையிலான காலப்பகுதியில் இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

Recent Articles

Back to top button