பேஸ்புக்கில் விளம்பரங்களை பதிவிட்டு வாகனங்களை விற்றுவிட்டு , வாங்குபவர்களை பின்தொடர்ந்து சென்று ஆயுதமுனையில் வாகனத்தை கொள்ளையடிக்கும் கும்பல் – இப்போதைக்கு ஒருவர் கைது மற்றவர்கள் தலைமறைவு
ஒழுங்கமைக்கப்பட்ட வாகனக் கொள்ளைச் கும்பலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 10ஆம் திகதி நபர் ஒருவர், தான் 4 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்த வேன் ஒன்றை ஆயுதமேந்திய குழுவினர் பலவந்தமாக பறித்துச் சென்றதாக அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்குற்றச் செயலுடன் மடுங்கொட, பாலும்மஹார பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் உட்பட சுமார் பத்து பேர் தொடர்புபட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வாகனங்களை விற்பனை செய்வதற்காக பேஸ்புக்கில் விளம்பரங்களை பதிவிட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விற்பனை முடிந்த பின்னர், அவர்கள் வாங்குபவர்களைப் பின்தொடர்ந்து சென்று திட்டமிட்ட முறையில் வாகனங்களைக் கொள்ளையடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உட்பட பல சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளனர்.
நிட்டம்புவ, கலகெடிஹேன பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இரண்டு வாள்கள், இரண்டு கைத்துப்பாக்கி மேகசின்கள், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு ஜீப் வண்டி ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதேபோன்ற முறையில் நடத்தப்பட்ட மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜூலை 14ஆம் திகதி கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், ஜூலை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



