தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள இந்நிலையில், கல்முனை உப செயலக வழக்கை சுமந்திரன் வாபஸ் பெறுவாரா? முஸ்லிம்களின் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது.. பதில் வருமா?
நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் அடையாளமாக, முஸ்லிம் சமூகத்துடைய தலை நகரமாக இருக்கின்ற கல்முனையை எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தினூடாக வழக்காடி வெல்லுவதை அனுமதிக்கின்றதா?
அல்லது இந்த இக்கட்டான தருவாயில் சுமந்திரனை வழக்கிலிருந்து வாபஸ் பெறச் செய்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்குமா என்ற கேள்வி இன்று பரவலாக மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றது என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்,
ஆறு தமிழ் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள இந்தச் சூழ்நிலையில் இந்தக் கூட்டணியில் அங்கமாக இருக்கின்ற இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கல்முனை உப பிரதேச செயலக பிரச்சனைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணக்கமாக பேசி ஒரு நிலையான தீர்வுக்கு முன்வருவாரா என்ற கேள்வி பரவலாக இன்று பேசப்படுகின்றது.
குறிப்பாக இந்தக் கூட்டணியின் நோக்கத்தில் ஒன்று வட கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை பேச்சுவார்த்தை ஊடாகத் தீர்வு காண்பது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கல்முனை மாநகரத்தை துண்டாடுவதற்காக எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கடந்த வாரம் கூட மூன்று மணி நேரத்துக்கு மேல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். அந்த அடிப்படையில் இன்று பொதுமக்கள் கேட்கின்ற கேள்வி என்னவென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் அடையாளமாக, முஸ்லிம் சமூகத்துடைய தலை நகரமாக இருக்கின்ற கல்முனையை எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தினூடாக வழக்காடி வெல்லுவதை அனுமதிக்கின்றதா? அல்லது இந்த இக்கட்டான தருவாயில் சுமந்திரனை வழக்கிலிருந்து வாபஸ் பெறச் செய்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்குமா என்ற கேள்வி இன்று பரவலாக மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றது.
ஏனென்றால் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கல்முனை உப பிரதேச செயலக வழக்குக்காக கடுமையாக வாதாடுகின்ற அதே நேரம் அந்த வழக்குக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு எதிராக தன்னுடைய செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பரை எதிர் வழக்கொன்றை தாக்கல் செய்து அதற்கு எதிராக வாதிடாமல் மௌனமாக இருப்பது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் உயிர்நாடியான இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுமென்றே Same Side Goal அடிப்பது போன்று சுமந்திரன் நீதிமன்றத்தின் ஊடாக வென்று கல்முனையை துண்டாடி எடுக்கட்டுமென்று தானாக Same Side Goal அடித்துள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
ஏனென்றால் சாய்ந்தமருது நகரசபை விவகாரத்தில் காரியப்பர் அவர்கள் ஓடோடிச் சென்று அதில் ஒரு இடையீட்டு மனிதராக வழக்காட முடியும் என்றால் அதைவிட ஆயிரம் மடங்கு பாரதூரமான இலங்கை முஸ்லிம்களின் உயிர்நாடியான இந்தக் கல்முனை விவகாரத்தில் ஏன் காரியப்பர் சுமந்திரனுக்கு எதிராக வழக்காடவில்லை என்ற கேள்வி இன்று எழுகின்றது.
எனவேதான். இவ்வாறான ஒரு நிலைமையில் இன்று புதிய கூட்டணி ஊடாகச் சரி ஒரு பேச்சு பேசுவதற்கான ஒரு தளம் உருவாகியுள்ள சூழ்நிலையில், அவசர அவசரமாக முஸ்லிம் காங்கிரஸ் இதனை சுமந்திரனுடன் பேசி ஒரு சமாதான மேடையில் ஒரு தீர்வை கல்முனை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதே நேரம், இந்த வழக்கிலிருந்து சுமந்திரனை வாபஸ் பெறச் செய்து இரு சமூகங்களும் பேச்சுவார்த்தை, இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுகின்றது.
கல்முனையில் விரைவில் மாநகர சபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கும் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரபரப்பாக கல்முனையில் அரசியல் செய்ய முற்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், கல்முனை தொகுதி மக்களின் வாக்குகளுக்காக மட்டும் அந்த மக்களை இயந்திரமாகப் பாவிக்காமல் அந்த மக்களுடைய உயிர்நாடி கல்முனை நகரத்தைக் காப்பாற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய முயற்சி எடுக்கப்போகின்றது என்பதை மக்கள் மத்தியில் இதயசுத்தியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.- என்று தெரிவித்துள்ளார்.



