போரினால் ஈரானில் இருந்து தார் வரவில்லை.. வீதி அபிவிருத்திப் பணிகள் பாதிப்பு..

ஈரானில் இருந்து தார் இறக்குமதி செய்யப்படாததால் வீதி அபிவிருத்திப் பணிகள் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஈரானில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்தச் சிக்கல் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“வீதி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் இன்னும் பெரிய அளவில் சிக்கல் நிலை ஏற்படவில்லை. ஆனால் தற்சமயம் தார் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கைக்குத் தேவையான தாரில் 100 சதவீதத்தையும் நாம் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்கிறோம். நமது நாட்டின் வானிலைக்கு ஏற்ற தார் ஈரானிலேயே தயாரிக்கப்படுகிறது. ஆனால் தற்போது ஈரானில் இருந்து தார் வரவில்லை, கப்பல்கள் தாமதமாகியுள்ளன. மிகக் குறைந்த அளவிலான தாரே தற்போது எம்மிடம் உள்ளது.
தற்போது நாடு முழுவதும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால், எனது கணிப்பின்படி கடந்த பத்து வருட வரலாற்றிலேயே இலங்கையில் தாருக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ள சந்தர்ப்பமாக இது மாறியுள்ளது. போர் காரணமாகவே தார் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் திட்டங்களின் வேகம் குறைந்த நிலையை காண முடிகிறது.
வேறு நாடுகளிலிருந்து பெறப்படும் தாரில் உள்ள சல்பரின் அளவு இலங்கையின் வீதிகளுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். ஈரானில் உற்பத்தியாகும் தாரே இலங்கைக்குச் சரியாகப் பொருந்துகிறது. சிலர் இந்தியா, பாகிஸ்தான் அல்லது மத்திய கிழக்கிலுள்ள ஏனைய நாடுகளிலிருந்து தாரை இறக்குமதி செய்யலாம் என்று நினைக்கலாம். இந்தியாவின் தார் நமக்கு ஓரளவுக்குப் பொருத்தமானதுதான். ஆனால் அந்நாடுகள் தங்களின் சொந்தத் தேவைகளுக்காக மட்டுமே தாரை உற்பத்தி செய்கின்றன.
மேலும், ஏனைய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தார் இலங்கையின் வெயில் மற்றும் வெப்பநிலைக்குப் பொருந்துவதில்லை. அத்தாரின் தரம் இலங்கையின் தரநிலைகளுக்கு அமைவாக இல்லாததால் நிராகரிக்கப்படுகிறது. இதனால்தான் தற்போது இந்தச் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.”
– கமல் சுரவீர / கண்டி



