News

கடந்த அரசாங்கங்களின் தவறுகளினாலேயே ஹேக்கர்கள் 2.5 மில்லியன் டாலர்களை களவாடினர்…

கருவூலத்தின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற 2.5 மில்லியன் டாலர் சைபர் குற்றம், பல தசாப்தங்களாக அத்தொகுதியில் காணப்பட்ட கட்டுப்பாட்டு நடைமுறை பலவீனங்களின் விளைவே ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜெயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர், இது புதிதாக அமைக்கப்பட்ட பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தினால் ஏற்பட்ட ஒன்று அல்ல என்றும், நீண்டகாலமாக நிலவி வந்த நிர்வாக இடைவெளிகளாலேயே நிகழ்ந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக தற்போது பரந்த அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகளின் சேவைகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ இது குறித்து முன் எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்ற போதிலும், இலங்கை கணினி அவசர காலப் பதிலளிப்புக் குழு (Sri Lanka CERT) குறித்த மின்னஞ்சல் சர்வரில் காணப்பட்ட பாதுகாப்பற்ற தன்மை குறித்து முன்னரே விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்ததாக அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தினார்.

அமைப்பின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை, தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளுக்கும் தொடர்பான ஆவணங்கள் நேரில் பரிசோதிக்கப்பட்டு, அவற்றின் துல்லியம் உறுதி செய்யப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button