மக்களிடம் பணம் இல்லாவிட்டால் நமக்கும் எதிர்காலம் இல்லை.. – டட்லி

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்களின் வாங்கும் திறன் குறைவது தொழில்துறையின் வீழ்ச்சிக்கு நேரடியாகப் பங்களிப்பதாக பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மக்களிடம் பணம் இல்லாவிட்டால் தொழிலதிபர்களுக்கும் எதிர்காலம் இருக்காது என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த சிறிசேன, தனியார் துறை மற்றும் நாட்டில் உள்ள நடைமுறைகள் மீதான மக்களின் நம்பிக்கை உடைந்துபோயுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு இதுவரை நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல்வாதிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், கடந்த காலத்தில் வாக்கு சேகரிப்பதற்காக கழிப்பறைப் பொருட்களையும் கூரைத் தகடுகளையும் பகிர்ந்தளிக்கும் அரசியல் கலாச்சாரத்தில் தானும் பங்கெடுத்ததாக அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
நாட்டின் இளைஞர் சமுதாயத்திற்கு அறிவுரை வழங்கிய அவர், அரசாங்க வேலை கிடைக்கும் வரை காத்திருக்காமல் கைத்தொழில் அல்லது தொழிற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள அரசாங்கத்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவது கடினம் என்றும், சுயதொழில் மற்றும் தொழில்சார் திறன்கள் மூலமே பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த நான்கு மாத காலத்தில் மட்டும் கடன் அட்டை (Credit Card) கடன்கள் 20 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக சிறிசேன வெளிப்படுத்தினார்.
மேலும், அதே காலப்பகுதியில் மக்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் அளவு 35,000 கோடி ரூபாயால் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டில் அதிக தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் டட்லி சிறிசேன மேலும் வலியுறுத்தினார்.



