News

மீரான் சாஹீப் வலியுல்லாஹ்வின் தர்காவிற்கு சேதம் விளைவிப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் நலகாமம் எனும் கிராமத்திலுள்ள மீரான் சாஹீப் வலியுல்லாஹ்வின் தர்காவிற்கு அண்மையில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த தர்காவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்திலுள்ள இளைஞர் குழுவொன்றினாலேயே இந்த சேதம் விளைவிக்கப்பட்டதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தங்காலை சந்தியிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் வீரகொட்டிய – தங்காலை பிரதான வீதியிலேயே முஸ்லிம் நலகாமம் எனும் கிராமம் அமையப் பெற்றுள்ளது.

சுமார் 90 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்திலுள்ள ஒரேயொரு பள்ளிவாசல் ஹிதாயதுல் ஜும்ஆ மஸ்ஜிதாகும்

இந்தப் பள்ளிவாசல் வளாகத்திற்குள் அமையப்பெற்றுள்ள சுமார் 200 வருடங்கள் பழமையான மீரான் சாஹீப் வலியுல்லாஹ்வின் தர்காவே சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கும் நள்ளிரவு 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே குறித்த தர்கா சேதமாக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தங்காலை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இக்கிராமத்திலுள்ள முஸ்லிம் மக்கள், அண்டிய கிராமங்களில் வாழும் சிங்கள மக்களுடன் நெருக்கமான உறவினை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recent Articles

Back to top button