News

டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை தொடர்பில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப் பட்டனர்

பாறுக் ஷிஹான்

டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிப் பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குமார, போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்தன ஆகியோர் தலைமையில் இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குறிப்பிடுகையில்:

“பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை பொதுமக்கள் உடனடியாகப் பொலிஸாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்மாந்துறையை ஒழுக்கமும் சட்டமும் நிலவும் பாதுகாப்பான சமூகமாக மாற்றுவதே எமது நோக்கமாகும். இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் கடுமையாகக் கருதப்படும்.”

மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு, நண்பர்கள் வட்டம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விழிப்புடனும் கூடுதல் கவனத்துடனும் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button