மஹர சிறைச்சாலை மோதல் வெளியிலிருந்து இயக்கப்படும் ஒரு சதி போன்றது.. – நீதி அமைச்சர்

சிறைச்சாலைகளுக்குள் அண்மையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகள் வெறுமனே நிலவும் நெரிசலினால் மாத்திரம் ஏற்பட்டவை அல்ல, அவற்றின் பின்னணியில் ஏதேனும் வெளி அமைப்புக்களின் திட்டமிட்ட தலையீடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமையானது, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை விட வித்தியாசமான ஒரு வடிவத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலை நிர்வாகத்துடன் கைதிகள் மோதல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு, அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் தேடுதல்கள் தீவிரமடைந்ததோடு, சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவது மட்டுப்படுத்தப்பட்டமை இவ்வாறான அமைதியின்மைகள் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அமைச்சர் கருதுகின்றார்.
சிறைச்சாலை நெரிசல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தற்போது சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 40,000 பேரில் 30,000 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் எனவும், அவர்களில் 23,000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எனவும் வெளிப்படுத்தினார்.
இந்த நெரிசலைக் குறைப்பதற்காக, அரசாங்கம் சிறைச்சாலைகளின் பௌதிக இடவசதிகளை விரிவுபடுத்துவதற்கு மேலதிகமாக, சட்டத் திருத்தங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
விசேடமாக, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் பிணை பெறுவதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 100 கிராமுக்கும் குறைவான போதைப்பொருளை வைத்திருக்கும் நபர்களுக்கு மேல் நீதிமன்றம் ஊடாக பிணை பெறுவதற்கு ஏதுவாக, நச்சுப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சட்டத்தின் ஊடாக மாத்திரம் போதைப்பொருள் அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியாது என வலியுறுத்திய அமைச்சர், சமூக ரீதியாகவும் இதற்குத் தீர்வுகளைக் காண வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
சில வேலைத் தளங்களில் ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் வழங்கப்படும் நிலை காணப்படுவதாகவும், இவ்வாறான சமூகப் பின்னணியில் போதைப்பொருள் தேவையைக் கட்டுப்படுத்துவதற்கு விரிவான சமூக செயற்பாடுகள் அவசியம் எனவும் அவர் இறுதியாகக் குறிப்பிட்டார்.



