முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்ட 7 வழக்குகளை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஏழு வழக்குகள், குறித்த வழக்குத் தாக்கல் முறையின் போது ஆணைக்குழுவின் ஆணையாளர் ஒருவர் கையொப்பமிடவில்லை எனக் கூறி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.
குறித்த ஏழு வழக்குகளும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியே நிராகரிக்கப்பட்டிருந்தன.
ஜோன்ஸ்டனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த இவ்வழக்குகள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய லஞ்ச ஆணைக்குழு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்தது.
குறித்த வழக்குகளை மீண்டும் விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரியே அது தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கமைய, லஞ்ச ஆணைக்குழு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



