திறைசேரி கொள்ளைக்கு திறைசேரிச் செயலாளரும் மத்திய வங்கி ஆளுநரும் பொறுப்பேற்க வேண்டும் – COPF அறிக்கையில் பரிந்துரை ..

2.5 மில்லியன் டாலர் கடன் கொடுப்பனவின் போது இடம்பெற்ற சைபர் குற்றச்செயல் (cybercrime) தொடர்பில் திறைசேரிச் செயலாளர் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என நிதிக்குழு (COPF) அறிக்கை மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் (சமகி ஜன பலவேகய
) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் இறையாண்மைமிக்க கடன் மேலாண்மை அமைப்பின் வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகக் கடுமையான பாதுகாப்பு மீறல் இதுவென்றும், இது ஒரு மிகப்பெரிய மோசடி என்பதை தாம் உறுதிப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு சுட்டிக்காட்டினார்.
நிதிக்குழுவின் இறுதி முடிவுகள் இதன் தொடர்பான வலுவான ஆதாரங்களை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரும் உடன்பாட்டுடன் இந்த அறிக்கையின் முடிவுகளில் கையெழுத்திட்டுள்ளதால், அரசாங்கமும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஹாஷிம் தெரிவித்தார்.
“யாரோ ஒருவர் இந்த மோசடியை இயக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது. அது குறித்து ஆராயப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நான்கு இளநிலை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டமை குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
சிரேஷ்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீக்காமல் இளநிலை அதிகாரிகளை மட்டும் தண்டித்தது எந்த அடிப்படையில் என அவர் வினவினார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை மிகவும் தீவிரமான நிலைமையாகும் என்றும், அது குறித்து அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கபீர் ஹாஷிம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.



