News

பொதுஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்..

நீதிபதிகளின் பதவிக் காலம் மற்றும் ஓய்வுபெறும் வயது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவைப்பட்டால், பொதுஜன வாக்கெடுப்பு (Referendum) ஒன்றை எதிர்கொள்ள அரசாங்கம் முழு ஆயத்தத்துடன் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன ரூபவாஹினியின் (ITN) ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்:

2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட போதிலும், உச்சநீதிமன்றத்தின் முழுமையான நீதிபதிகள் குழாம் (Full Bench) முன்னிலையில் அந்தத் தீர்மானங்களை மீண்டும் பரிசீலனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

சரியான சட்டபூர்வமான தர்க்கங்களின் அடிப்படையிலேயே அரசாங்கம் இந்தத் திருத்தங்களை முன்வைக்கிறது என்றும், அதற்கு நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் மதிப்பவதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தத் திருத்தத்திற்குப் பொதுஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை எதிர்கொள்ள நாம் எவ்விதத்திலும் தயங்கமாட்டோம். எங்களிடம் தெளிவான மக்கள் ஆணையும் அதிகாரமும் உள்ளது. மக்கள் எங்கள் அரசாங்கத்துடனேயே இருக்கிறார்கள்” என்று திருமதி விஜேசிங்க வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சியின் சில தலைவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அவர்களின் அரசியல் அடித்தளம் அசைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வாய்திறந்தால் ஆயிரக்கணக்கான வாக்குகள் இழக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச சுட்டெண்களின்படி (Indicators) ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்கள் ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எந்தவொரு தேர்தலுக்கும் அல்லது பொதுஜன வாக்கெடுப்புக்கும் அரசாங்கம் பயப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button