தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.. தற்போது மக்கள் பாதுகாப்பிலேயே கவனம் செலுத்துகிறோம் – பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர

நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்கனவே உச்சக்கட்ட அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் சிறப்பு கவனம் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதிலேயே உள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் சிறைச்சாலைகளில் பதிவான துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின் தொடர் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும், இது குறித்து நீதி அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸவும் சிறப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் நீதி அமைச்சும் இணைந்து சிறப்பு விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“மூன்று நாட்களுக்குள் நான்கு சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவானதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இது தொடர்பாக நேற்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் சிறப்பு கலந்தரையாடல் ஒன்று நடைபெற்றது. தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதால், இது குறித்த மேலதிக தகவல்களை இத்தருணத்தில் வெளிப்படுத்துவது பொருத்தமானது அல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் கடற்பரப்பு உட்பட தீவு முழுவதும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு பிரச்சினையும் இல்லை என வலியுறுத்திய அருண ஜெயசேகர, பொது அமைதியையும் சட்டத்தையும் நிலைநாட்டுவதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸாருக்கு உதவ முப்படையினரும் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அரசியலமைப்பிற்கு அமைவாக மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் இங்கு வலியுறுத்தினார்.



