“கடிதத்திற்குப் பதில் கிடைக்காதது கவலையளிக்கும் விடயம்” – மல்வத்து மகாநாயக்க தேரர்

மகாநாயக்க தேரர்கள் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கும் சந்தர்ப்பங்களில் கூட, அக்கடிதம் தொடர்பாக இதுவரை எவ்வித பதிலும் கிடைக்காதது கவலையளிக்கும் ஒரு நிலையாகும் என மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்போட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
மூன்று மதப்பிரிவுகளையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் நாட்டின் ஆட்சியாளர்களுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விடயங்கள் தொடர்பாக வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவது பண்டைக்காலம் தொட்டே இடம்பெற்று வரும் ஒரு பாரம்பரியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கோ அல்லது நாட்டின் ஆட்சியாளர்களுக்கோ கடிதம் அனுப்பும் போது, அதற்குப் பதில் கடிதம் அனுப்புவது பொதுவான பாரம்பரியமாக இருந்தபோதிலும், தற்போதைக்கு அந்தப் பாரம்பரியம் மீறப்பட்டுள்ளதாக மல்வத்து மகாநாயக்க தேரர் வலியுறுத்தினார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான பிரச்சினை குறித்து மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டைக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும், குறைந்தபட்சம் அக்கடிதம் கிடைக்கப்பெற்றதா என்பது கூட மகாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கண்டிக்கு விஜயம் செய்து தம்மைச் சந்தித்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினரிடம் மல்வத்து மகாநாயக்க தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



