நாட்டில் இயங்கி வரும் பாதாள உலகக் குழுக்கள் தற்போது முழுமையாக அடையாளம் காணப்பட்டு விட்டன – ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம் – இப்போதுதான் சரியான System : விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்

நாட்டில் இயங்கி வரும் பாதாள உலகக் குழுக்கள் தற்போது முழுமையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை பெருமளவில் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினரால் முடியும் என வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரொஹான் ஓலுகல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“தற்போது அனைத்து பாதாள உலகக் குழுக்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அதேபோல், அச்சுறுத்தல் நிலவும் நபர்கள் குறித்தும் அவர்களுக்கு அறியப்படுத்தியுள்ளோம். பிரதேச பொலிஸாரையும் நமது புலனாய்வுப் பிரிவினரையும் விழிப்புணர்வடையச் செய்துள்ளோம். எனவே, ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்; தற்போதும் அது தொடர்கிறது.”
“ஏனெனில், இதை உடனடியாகக் கட்டுப்படுத்துவது எளிதானதல்ல. ஏனெனில் இது நீண்டகாலமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று… வார்த்தையிலேயே ‘திட்டமிட்ட குற்றவாளிகள்’ என குறிப்பிடப்படுவதால், இது ஒரு பெரிய அமைப்பாகும். எனவே எமக்கு சிறிது காலம் தேவைப்படும். ஏனெனில் இப்போதுதான் நாங்கள் சரியான முறைமைக்குள் (System) வந்துள்ளோம்.”
“எனவே நாம் அனைவரும் இதில் தலையிட்டு செயற்படுகிறோம்… இலங்கை பொலிஸ் மட்டுமன்றி இராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைந்து இதற்காகப் பெரும் தியாகத்தைச் செய்து வருகின்றன. எதிர்காலத்தில் இதனைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என நான் நினைக்கிறேன்.” என்றார்.



