News

கல்முனை வைத்தியசாலையில் ஹிஜாப் மற்றும் நீண்ட ஆடை அணிய தடை விதிக்கிறார்கள் – பரீட்சை நிலையமொன்றிலும் பெண் பரீட்சார்த்திகளுக்கு மன அழுத்தம் கொடுத்துள்ளார்கள் – இவற்றை நான் கண்டிக்கிறேன் ; காதர் மஸ்தான் (M.P)

கல்முனை வைத்தியசாலை விவகாரம் மற்றும் பரீட்சை முறைப்பாடு: கலாசார உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமாக்கல் அவசியம் –  காதர் மஸ்தான் (MP) கோரிக்கை

இலங்கையில் அனைத்துப் பிரஜைகளையும் மனிதாபிமானத்துடன் நோக்குவதுடன், சமய மற்றும் கலாசார அடையாளங்களை முழுமையாகப் பேணுகின்ற வகையில் நிரந்தரத் தீர்வொன்றைக் சட்டமாக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவருமான காதர் மஸ்தான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்

பன்மைத்துவ சமூகம் வாழும் எமது நாட்டில் சகல இனங்களுக்கும் அதன் கலாசார உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது இன்றியமையாததாகும்.

எமக்கிடையில் நீண்ட காலமாக அமைதியும், ஒற்றுமையும், இன ஐக்கியமும் நிலவி வருவதோடு, அவரவர் கலாசாரங்களைப் பின்பற்றியும் வாழ்ந்து வருகின்றோம்.
ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்துவமான கலாசார அடையாளங்கள் காணப்படுவதுடன், அவை இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மைய விரும்பத்தகாத சம்பவங்கள்
இவ்வாறானதொரு பின்னணியில், அண்மையில் கல்முனை வைத்தியசாலைக்கு கனிஷ்ட சுகாதார சேவை உதவியாளர்களாக நியமனம் பெற்றுச் சென்ற பெண்கள், தமது சுய ஒழுக்கத்தைப் பேணும் வகையில் ஹிஜாப் மற்றும் நீண்ட ஆடை (நீளக் காற்சட்டை) அணிந்து சென்றமையினால் நிர்வாகத்தால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, இம்முறை நடைபெறுகின்ற க.பொ.த உயர்தர பரீட்சை நிலையமொன்றிலும் பெண் பரீட்சார்த்திகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையாகவே இவ்வாறான விடயங்கள் கண்டிக்கத்தக்கவையாகும்.

நிரந்தரத் தீர்வுக்கான அவசர வேண்டுகோள்
ஒரு சமூகத்திற்குத் தொடர்ச்சியாக அழுத்தம் ஏற்படுத்தப்படுவதை முற்றிலுமாக இல்லாது செய்யப்படல் வேண்டும்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இவ்விடயங்களை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதோடு, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சமய, கலாசார ஆடை உள்ளிட்ட ஏனைய உரிமைகளைப் பேணுவதற்கான ஒழுங்குகளை நிரந்தரச் சட்டமாகக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகப்பிரிவு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button