News

வீடொன்றை உடைத்து நுழைந்து, அங்கிருந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்து , பெருமளவிலான பொருட்களையும் கொள்ளையிட்டு சென்ற ஐந்து பேர் கைது #இலங்கை

வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து அத்துமீறி நுழைந்து, 51 வயதுடைய பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், பெருமளவிலான பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின்போது, வீட்டில் இருந்த வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வீட்டின் உரிமையாளரான பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளைப் பின்புறமாகக் கட்டிய பின்னர் அவரிடமிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்னர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்களையும், காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்களையும் சந்தேகநபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முதற்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையிடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகன ஆவணங்கள், திறப்புகள் மற்றும் 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது மற்றும் மீட்பு நடவடிக்கைகள், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ், வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button