News

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவவாசம் ராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவர் புத்திக ஹேவவாசம், தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களைக் குறிப்பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சச்சின் செயலாளரூடாக, சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் ஹேவவாசம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் SLTDA தலைவராகப் பணியாற்றியது தனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம் என்றும், தேசிய நலன் மற்றும் நிறுவனத்தின் நேர்மைக்கு முன்னுரிமை அளித்து தனது பொறுப்புகளை நிறைவேற்ற முயன்றதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹேவவாசம் 2024 ஒக்டோபர் முதல் 2026 ஓகஸ்ட் வரை தலைவராகப் பணியாற்றினார்.

இயற்கை சீற்றங்கள், முக்கிய சந்தைகளிலிருந்து வருகை தரும் பயணிகளைப் பாதித்த உலகளாவிய சமூக-அரசியல் நெருக்கடிகள் மற்றும் விமான நிலையத்தின் செயல்பாட்டுக் வரம்புகள் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும், தனது பதவிக் காலத்தில் இலங்கை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 2025 ஆம் ஆண்டில் இலங்கை 15க்கும் மேற்பட்ட சர்வதேச சுற்றுலா விருதுகளைப் பெற்று, முன்னணி உலகளாவிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் சுற்றுலா உத்தி மற்றும் கொள்கை வழிகாட்டல்கள் மீது நம்பிக்கையை கட்டியெழுப்பும் அதே வேளையில், தேசிய சுற்றுலா இலக்குகளைச் சுற்றி சுற்றுலாத்துறை பங்குதாரர்களை ஒன்றிணைக்க தான் உழைத்ததாக ஹேவவாசம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையில் வெளிப்படைத்தன்மை ஒரு முக்கியமான கவலையாக இருந்த நிலையில், தனது பதவிக்காலத்தில் SLTDA நிறுவனத்திற்குள் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது ஒரு முக்கிய இலக்காக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SLTDA மற்றும் நாட்டின் நலனைக் கருதி, அடுத்ததாகப் பொறுப்பேற்கும் புதிய தலைமைத்துவத்திற்கு முறையான மாற்றங்களைச் செய்ய ஆதரவளிப்பதாக ஹேவவாசம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button