அடுத்து வரும் 35 ஆண்டுகளுக்கு அனுரவுக்கு போட்டியாளர் எவரும் இல்லை.. அவரே உன்னதமான ஜனாதிபதி.. அரசாங்கம் ஒரு மகத்தான அரசாங்கம்..

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிர்வரும் 35 வருட காலத்திற்கு அரசியல் ரீதியாக சவால் விடுக்கக்கூடிய தலைவர்கள் எவரும் நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் புத்தி கூர்மை மற்றும் நாட்டின் மீதான அளப்பரிய பற்றைப் பாராட்டிய அமைச்சர், அவரை ‘உன்னதமான ஜனாதிபதி’ என அழைக்க பொதுமக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
எதிர்வரும் 25, 30 அல்லது 35 வருட காலப்பகுதியில் ஜனாதிபதியுடன் அரசியல் ரீதியாகப் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய தலைவர் யாராவது இருந்தால் அவரை அடையாளம் காட்டுமாறு அமைச்சர் எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்தார். தற்போதைய சூழலில் அவ்வாறான தலைவர்கள் எவரும் இல்லை என்றும், ஜனாதிபதியின் அரசியல் பயணம் மிகவும் வலுவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் கட்டியெழுப்பியுள்ள வலுவான மக்கள் அடித்தளத்திற்கு முன்னால் எதிர்க்கட்சி முற்றிலும் முடங்கியுள்ளதாக அருண ஜெயசேகர தெரிவித்தார்.
“நாம் உருவாக்கியுள்ள இந்த மகத்தான மக்கள் அரசாங்கத்தின் சக்தியால் எதிர்க்கட்சிக்கு என்ன நடந்தது? அவர்கள் பாராளுமன்ற நாற்காலிகளுடன் ஒட்டப்பட்டு முத்திரையிடப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு இனி இந்த நாட்டில் அரசியல் கிடையாது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



