News

இந்த அரசாங்கம் 12 இலட்சம் ரூபாவுக்கு விட்ஸ் கார் தரவில்லை – இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருளை வழங்கவில்லை – மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்கவில்லை… இந்த அரசாங்கம் வெறும் பொய்யா சொல்கிறார்கள் ; சஜித் இன்று குற்றச்சாட்டு

அரசாங்கம் பொய்யான தரவுகளின் அடிப்படையிலேயே கொள்கைகளை உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.



அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி தேர்தல் தொகுதியின் ரம்பாவ பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.







2019ஆம் ஆண்டில் மக்கள் ஏமாற்றப்பட்டதன் விளைவாக நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், 2024ஆம் ஆண்டிலும் மக்கள் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும் ஸ்தம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 220 இலட்சம் மக்களும் தற்போது அசௌகரியங்களுக்கும் அச்சத்திற்கும் முகங்கொடுத்து வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு 17,315 ரூபா போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மாவட்ட மட்டத்திலும் இதுதொடர்பான கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



இவ்வாறான தரவுகளை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும், அவை மக்களின் உண்மையான வாழ்க்கை நிலைமையை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும், தேர்தல் காலத்தில் வயல்களில் இறங்கி நெற்கதிர்களை கையில் எடுத்துக்கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்ததாகவும், தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபாவே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகிறது என விவசாய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.



அத்துடன், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருளை வழங்குதல் மற்றும் 12 இலட்சம் ரூபாவுக்கு விட்ட்ஸ் ரக காரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், அவற்றில் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button