‘சூட்டி உக்குங்’ என்பவரின் அத்தையும், ‘கூம்பிகலே சூட்டி’யின் மனைவியுமான நோனா அம்மா, போதைப்பொருளுடன் கைது

பல ஆண்டுகளாகப் போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்து வந்த பத்மா ரஞ்சனி எனப்படும் ‘நொனா அம்மா’, கிரிபத்ஹொடை பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிகுளத்தில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு வழங்குவதற்காக வந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய இவர், கிரிபத்ஹொடை மற்றும் கொம்பனிவீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வதிவிடப் பெண் ஆவார். இவரைக் கைது செய்யும் வேளையிலும் விற்பனைக்காகத் தயார்ப்படுத்தப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், போதைப்பொருளை விற்றுச் சம்பாதித்த 48,000 ரூபாய் பணமும் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கொம்பனிவீதி ‘குடுநொனா’ என்றும் அழைக்கப்படுவது இத்தகைய போதைப்பொருள் கடத்தல்களினாலேயாகும்.
சந்தேகநபர் நச்சுப் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவருக்கு எதிராக இதற்கு முன்னர் இருந்த போதைப்பொருள் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார். குறித்த வழக்கு தொடர்பான அரச பகுப்பாய்வாளர் அறிக்கையின்படி, இவரிடம் இருந்த ஐஸ் போதைப்பொருளின் அளவு 34 கிராம்களாகும்.
பொலிஸாருக்குக் கட்டம் காட்டித் தலைமறைவாகியிருந்த இந்தக் குற்றவாளிப் பெண் மீது பொலிஸார் விசேட கவனத்தைச் செலுத்தியிருந்தனர்.
இவரால் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட பணம், சொத்துகள் மற்றும் உடமைகள் தொடர்பிலும் கிரிபத்கொடை பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளதுடன், அந்த வெளிப்படுத்தல்களுக்கு அமைவான மேலதிகச் சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் கிரிபத்கொடை ப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேகநபர் பெண், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலில் உயிரிழந்த ‘சூட்டி உக்குங்’ என்பவரின் அத்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தேகநபரின் கணவன் ‘கூம்பிகலே சூட்டி’ என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுவதுடன், அவரும் தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்டமை காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



