News

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா அல்லது பிரதேச செயலாளரா?; நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா அல்லது பிரதேச செயலாளரா?; நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்!


( ஏ.ஆர்.எம். அஸார்டீன், கொழும்பு, 07.09.2026)

கல்முனையன்ஸ் ஃபோரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு WRT/645/23 இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ் வழக்கில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களின் அறிவுறுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா முன்னிலையாகி இருந்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கலையரசன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தொடர்புடைய மற்றொரு ரிட் மனுவும் WRT/67/23 இதனுடன் இணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனின் மனுவினை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் வாதங்களினை முன்வைத்தார்.

இவ்வழக்கின் மையக் கேள்வி, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி “பிரதேச செயலாளர்”  DS அல்ல; அவர் “உப பிரதேச செயலாளர்” ADS என்பதே ஆகும்.

அதனடிப்படையில், ஒரு உப பிரதேச செயலாளர், பிரதேச செயலாளருக்குரிய அதிகாரங்களையும் கடமைகளையும் மேற்கொள்ளவோ, “பிரதேச செயலாளர்” என்ற பதவிப் பெயரை உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள், ரப்பர் முத்திரைகள் மற்றும் ஏனைய அலுவலக ஆவணங்களில் பயன்படுத்தவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தி, அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்குமாறு கட்டளையிடக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் மனுவினை ஆதரித்து சமர்ப்பணங்களை செய்தார். இதன் போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், ஐந்தாவது பிரதிவாதியான கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் அவரது தரப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கு பதிலளித்த குறித்த சட்டத்தரணி Anketel, ஐந்தாவது பிரதிவாதி ஒரு “உப பிரதேச செயலாளர்” என்பதனை திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட அரசுத் தரப்பு சட்டத்தரணி, இவ்விடயம் இன்று நீதிமன்றத்தில் தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது, அதுவே அரசின் நிலைப்பாடும் ஆகும் எனக் குறிப்பிட்டார். மேலும், சட்டமா அதிபர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் ஏன் கையொப்பமிட முடியவில்லை என ஐந்தாவது பிரதிவாதியிடம் கேள்வி எழுப்பினார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் அரச அதிகாரியாக இருந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சேவையை இடை நிறுத்தி தனக்கான தனிப்பட்ட (Private ) சட்டத்தரணி ஒருவரை நியமித்து வழக்கு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, வழக்கின் முழுமையான விவாதத்திற்காக இரண்டு தினங்கள் (07.10.2026, 02.11.2026) ஒதுக்கி வழக்கு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கையின் மூலம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றுபவர் ஒரு “உப பிரதேச செயலாளர்” என்பதும், அவர் “பிரதேச செயலாளர்” அல்ல என்பதும் திறந்த நீதிமன்றத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button