News

இந்த அரசாங்கத்தால் இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் செயலற்று போயுள்ளது  – இந்த அநீதிக்கு எதிராக நான் முன்நிற்பேன்; சபா பீடத்திற்குள்ளும் சென்று இந்தப் பிரச்சினைகளை முன்வைப்பேன் ; சஜித் அறிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் கொள்கை பலவீனமாகக் காணப்படுகிறது. இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளும் செயல்திறனற்ற விதத்தில் அமைந்துள்ளன.

இதற்கு முன்னரும் நிர்மாணத் துறையைச் சேர்ந்த 3,500 பேருக்காக நான் குரல்கொடுத்தேன். ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் உட்கட்டமைப்புத் துறைக்கு எந்தவொரு வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. வேலைகளுக்குச் செல்ல எதிர்பார்த்திருப்போர் பொலிஸ் அறிக்கைகளையும் தகுதிப் பரிசோதனைகளையும் பெற்றபோதிலும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இன்னும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் திங்கட்கிழமை (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ‘இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரைச்’ சந்தித்துக் கலந்துரையாடிய வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.

560 பேர் இந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும் 1,200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையில் (Infrastructure Lottery System) காத்திருக்கின்றனர். இந்த உட்கட்டமைப்புப் பிரிவினர் மற்றும் நிர்மாணத் துறையைச் சேர்ந்தவர்கள் முகங்கொடுக்கும் பிரதான பொதுவான பிரச்சினை, அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் மந்தகதியில் இடம்பெறுவதும், அதேவேளை தனியார் துறையின் வேலைத்திட்டம் துரிதமாக நடைபெறுவதுமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அசாங்கத்தின் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லும்போது 10 இலட்சம் போன்ற குறைந்த தொகையே செலவாகிறது. ஆனால், தனியார் ஊடாகச் செல்வதாயின் 35 இலட்சம் செலுத்தவேண்டி ஏற்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தில் சுரண்டல்களும் சூறையாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த அநீதிக்கு எதிராக நான் முன்நிற்பேன்; சபா பீடத்திற்குள்ளும் சென்று இந்தப் பிரச்சினைகளை முன்வைப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்த தற்போதைய அரசாங்கம், இந்தச் சுரண்டல் முறையை ஒழித்து, 10 இலட்சத்திற்கு இஸ்ரேல் செல்லும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும், பொய் கூறும் அரசியலை நிறுத்துமாறும் இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பலவீனங்களைத் திருத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்த அமைதி வழியிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அநீதிக்குள்ளாகியுள்ள இந்த வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்போரைச் சந்தித்து, அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடி விவரங்களைக் கேட்டறிந்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button